Press "Enter" to skip to content

தமிழில் பெயர் வைத்ததற்காக மட்டும் கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிட முடியாது: உயர்நீதிநீதி மன்றம் 

சென்னை: தமிழில் பெயர் வைத்த காரணத்திற்காக மட்டும் கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ திரைப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஐ’ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், “தமிழில் ‘ஐ’ என்பது வியப்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. படத்தின் தலைப்புக்கு இப்படியொரு அர்த்தம் உள்ளதால், ‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிப்பதற்கான சலுகையாக, அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கிறது. இந்த சலுகையை உரிமையாக கோர முடியாது . நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும். கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.

மேலும், தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்காக கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது” எனக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »