Press "Enter" to skip to content

நடிகர் இன்னொசன்ட் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி

மறைந்த நடிகர் இன்னொசன்ட் (75) உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மலையாளம், தமிழ், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட். கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட், மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு வாரங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இன்னொசன்ட் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், சக தோழருமான இன்னொசென்ட்டின் மறைவு வருத்தத்தில் ஆழ்த்துகிறது. அவரது நடிப்பு மற்றும் வலுவான அரசியல் தலையீடுகள் யாவும் என்றென்றும் மறையாது நிலைத்திருக்கும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, இன்னொசன்ட் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்ற கேரள முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினார். நாளை இன்னொசன்ட் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »