Press "Enter" to skip to content

ஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா? வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!

ஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா? வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!Jan 29, 2020 18:50:12 pmJan 29, 2020 18:50:18 pmWeb Team

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்குப் புத்தகங்களில் புலம்பெயர்ந்த குடிமக்கள் என குறிப்பிடப் பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அமைந்துள்ள ஆவணம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள ஏராளமான வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குப் புத்தகத்தில் புலம்பெயர்ந்த குடிமக்கள் என அச்சடிக்கப்பட்டிருப்பதால் அதிர்ச்சி அடைந்து வங்கிக்கிளையில் வந்து வாக்குவாதம் செய்தனர். வாடிக்கையாளர்களிடம் வங்கித்தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஓபி வங்கியின் தஞ்சை மண்டல முதுநிலை மேலாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது, migration என்ற வார்த்தை 2015 ஆம் ஆண்டு வங்கி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட சாப்ட்வேரின் பெயர் என்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு புத்தகத்தில் மட்டுமே இதுபோன்ற பெயர் இடம் பெறும் என்றும் தெரிவித்தார்.
வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டால் தானாகவே இந்த பெயர் மாறிக்கொள்ளும் என்றும் புலம்பெயர்ந்த குடிமக்கள் என்ற பொருளுக்கும் migration என்ற வார்த்தைக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இதே போன்ற நடைமுறையே உள்ளது என்றும், பொதுமக்களின் அச்சத்தை போக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ‌முதுநிலை மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் தற்போது சிஏஏ, என்.ஆர்.சி தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், migration என்ற வார்த்தை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
  View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »