Press "Enter" to skip to content

‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. ஆனால், அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்தவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் சிஏஏ விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறுபாடான கருத்தினை தெரிவித்து வந்தார்.
இதனிடையே, பிரசாந்த் கிஷோர் இவ்வாறு பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிதிஷ்குமார், “ஒருவர் விரும்பும் வரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருக்கலாம். அவர் விரும்பினால், கட்சியை விட்டு செல்லலாம். அவர் கட்சியில் எப்படி சேர்ந்தார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு அமித்ஷா என்னிடம் கேட்டுக் கொண்டார்” என்று தெரிவித்திருந்தார்.
    
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், “ஏன் என்னை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்த்தீர்கள்? எப்படி சேர்த்தீர்கள் என்பது பற்றி பொய் சொல்லும் அளவிற்கு சென்றுவிட்டீர்களே. உங்களைப் போன்றே என்னையும் சித்தரிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சி மோசமானது. நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்றால், அமித் ஷாவால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின் பேச்சைக் கேட்காத தைரியம் உங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று யார் நம்புவார்கள்?” என்று கூறியிருந்தார்.
          
இதனையடுத்து, கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், முதல்வர் நிதிஷ்குமாரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில், “நன்றி நிதிஷ்குமார். பீகார் முதலமைச்சராக நீங்கள் தொடர என்னுடைய வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »