Press "Enter" to skip to content

கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் தொடர் வண்டிசேவை: தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிப்பு

கோவை- ‌மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நான்கு முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 4 முறையும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை எழுந்தது. அதாவது, தற்போது மாலை 5.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் மேட்டுப்பாளையத்திற்கு 6.40 மணிக்கு வந்தடைந்தவுடன் இதன் சேவை நிறுத்தப்படும். மீண்டும் அடுத்தநாள் காலை 8.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும்.

இந்த பயணிகள் ரயில் சேவையினை இரவில் ஒரு முறை கூடுதலாக இயக்கவேண்டும். இதனால் பணி முடித்து திரும்பும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பெரிதும் பயனடைவார்கள் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததது. அதன் அடிப்படையில், வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மேட்டுப்பாளையம்- கோவை இடையே கூடுதலாக ‌ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் 7.50 மணிக்கு கோவை சென்றடையும் என்றும் மீண்டும் கோவையில் இருந்து 8.20 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு இப்பகுதி பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »