Press "Enter" to skip to content

டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பதா? – ப.சிதம்பரம் கேள்வி

டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
டி.எம்.கிருஷ்ணாவின் Sebastian and Sons என்ற புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி கொடுத்திருந்தது. ஆனால், டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது என்று கூறி ஏற்கெனவே கொடுத்த அனுமதியை தற்போது ரத்து செய்வதாக கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
       
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு டி.எம்.கிருஷ்ணா அளித்த பேட்டியில், “தென்னிந்தியாவில் மிருதங்கம் செய்பவர்களின் வாழ்க்கையை பற்றிய புத்தகம் எழுதியுள்ளேன். பட்டியல் இன மக்கள்தான் 7 தலைமுறைகளாக மிருதங்கம் செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எந்த தோலை பயன்படுத்தினால் எப்படி தாளம் வரும் என்பதை அறிந்து மிருதங்கத்தை செய்கிறார்கள். மிருதங்கம் தயாரிப்பு தொழிலாளர்களின் சிரமத்தை புத்தகத்தில் கூறியுள்ளேன். பிப்ரவரி 2இல் திட்டமிட்டபடி புத்தக வெளியீட்டு விழா வேறு இடத்தில் நடைபெறும்” எனக் கூறியிருந்தார்.

         
இதனையடுத்து, ‘Sebastian and Sons’ புத்தக வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள ஆசியன் ஊடகவியல் கல்லூரியில் அதே பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு நடைபெறும் என்று தன்னுடைய ட்விட்டரில் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
Shameful that Kalakshetra should withdraw permission to hire their auditorium to release the new book by T M Krishna.‘Withdraw permission’ is an euphemism for cancelling a contract. Cancellation is illegal besides being high handed.— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2020
இதுதொடர்பாக ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டரில், “அனுமதியை திரும்பப் பெறுவது என்பது மறைமுகமாக ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்பதுதான். இதுசட்டவிரோதமானது. இதன் பின்னணியில் ஏதோ அழுத்தம் உள்ளது. கலாஷேத்ரா நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு எதிராக நிற்க வேண்டிய நேரம் இது. இந்த எதிர்ப்பினை காட்ட புத்தக மற்றும் இசைப் பிரியர்கள் அதிக அளவில் ஏசியன் ஊடகவியல் கல்லூரியில் திரள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »