Press "Enter" to skip to content

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.33 கோடி மோசடி – வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது

கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.33 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை திருச்சி சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் லட்சுமி பிரகாஷ்(45) என்பவர் பொது மேலாளராக உள்ளார். இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் “வங்கியின் முன்னாள் மேலாளர் தூத்துக்குடி மாவட்டம் திருத்தண்டு நல்லூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம்(55) உட்பட 4 பேர் வங்கியில் ரூ.33 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் வங்கியில் நடந்த கணக்கு தணிக்கையின் போது இது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோவை ஒண்டிப்புதூர் சேர்ந்த புரோக்கர் மகேஷ்(41), கட்டுமான தொழில் செய்துவரும் சூலூர் பாண்டியன்(44), கோழிப்பண்ணை நடத்தி வரும் செலக்கரிச்சல் சேர்ந்த கோமதி(42) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சூலூர், பல்லடம், கரடிவாவி ஆகிய பகுதிகளில் கோழிப்பண்ணை அமைக்க இருப்பதாக கூறி வங்கியில் கடன் கேட்டுள்ளனர்.
அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவசுப்பிரமணியன், நிலத்தின் மதிப்பை உயர்த்தி காட்டி பல மடங்கு கடன் கொடுத்துள்ளார். மேலும் இல்லாத நிலத்துக்கும் போலி ஆவணங்கள் தயாரித்து கடன் கொடுத்துள்ளார். அந்த வகையில் 4 பேரும் ரூ.33 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கு வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம் மூளையாக செயல்பட்டுள்ளார். அதன்பேரில் ஏமாற்றுதல், கூட்டு சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம், பிரோக்கர்கள் மகேஷ், பாண்டியன், தொழிலதிபர் கோமதி, ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »