Press "Enter" to skip to content

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிப்.25-ல் நேரில் ஆஜராக ரஜினிக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 25ஆம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் அவருக்கு தெரிந்த விவரங்களை தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. அந்த வன்முறையை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஸ்னோலின் என்கிற மாணவி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல 2018ஆம் ஆண்டு மே 30ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.

தூத்துக்குடி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டிதான் தற்போது அவருக்கு சம்மன் அனுப்ப காரணமாக அமைந்துள்ளது. அவர் அளித்த பேட்டியில், ‘தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையின்போது அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதும், போலீசாரை தாக்கியதும் சமூக விரோதிகள்தான். போராடிய மக்கள் அல்ல; அவர்கள் யாரென்று எனக்கு தெரியும்’ என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாட்களில் எப்படி சமூக விரோதிகள் உட்புகுந்து போராட்டத்தை திசைதிருப்ப முயன்றார்களோ அதேபோன்றுதான் இங்கேயும் சமூக விரோதிகள் உட்புகுந்தனர்’ என ரஜினி சொல்லியிருந்தார். மேலும், அந்த சமூக விரோதிகள் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதனை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25ஆம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் அவருக்கு தெரிந்த விவரங்களை தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீமான் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »