Press "Enter" to skip to content

”போலி செய்திகளை தடுக்க சிறப்பு டீம்” – களத்தில் இறங்கிய சென்னை காவல்துறை

சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் எவ்வளவோ போலி செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. பழைய புகைப்படங்கள், என்றோ நடந்த செய்திகள் என தனிமனிதர்களின் கட்டுக்கதைகளும் வைரலாகி வருகின்றன. இதனால் மக்களிடையே தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் இந்த தவறான தகவல்களால் வன்முறைகளும், கும்பல் தாக்குதல்களும் அரங்கேறிவிடுகின்றன. அதற்கு சமீபத்தில் நிறைய சம்பவங்கள் உதாரணமாக அமைந்துவிட்டன.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி போலியான தகவல்கள், சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. வீட்டிற்கு நேரடியாக ரத்தப்பரிசோதனை செய்ய வருபவர்கள் ஹெச்.ஐ.வி. நோயை பரப்புகிறார்கள், வடமாநில கும்பல் குழந்தைகளை கடத்துகிறது போன்ற வதந்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர காவல்துறையின் லோகோவோடு இந்த வதந்திகள் பரப்பப்படுவதால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். அதனால், சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைக்கச் சென்னை மாநகர காவல்துறை முடிவெடுத்துள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபார்வேர்ட் செய்திகளாக வரும் அனைத்தையும் நம்பக்கூடாது. அதை உடனடியாக நாமும் மற்றவர்களுக்கு அனுப்பாமல் அந்த செய்தி உண்மைதானா? எனப் பரிசோதிக்க வேண்டும். அது உண்மையாக இருந்தால் மட்டுமே அதனை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். காவல்துறை சார்ந்த செய்திகளாக இருந்தால் காவல்நிலையத்திற்குத் தொடர்புகொண்டு செய்தி குறித்த உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்

நம் செல்போன் மூலம் நம்மிடம் வந்து சேரும் செய்திகளை எல்லாம் ஒருமுறை மட்டும் உண்மைத்தன்மையைப் பரிசோதித்தாலே போதும். போலிச்செய்திகளை தடுக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »