Press "Enter" to skip to content

அசுர வேகமெடுக்கும் உணவு தொழில்நுட்ப துறை;இந்தியாவில் முதலீடுகள் 35% அதிகரிப்பு

புதுடில்லி : இந்தியாவில், உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி காணும் என, கூகுள் அண்டு போஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளதாவது:உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில், இந்தியாவில், கூட்டு ஆண்டு வளர்சி விகித அடிப்படையில், 25 சதவீத வளர்ச்சி பெறும். இது, 2022ம் ஆண்டு இறுதியில், கிட்டத்தட்ட 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சியுறும்.இதற்கு, அதிகரித்துள்ள இணைய பயன்பாடு, உணவு ஆர்டர் கொடுப்பது அதிகரிப்பு, சாதகமான நுகர்வோர் மனநிலை ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

கடந்த, 5 ஆண்டுகளில், இந்த உணவு தொழில்நுட்ப பிரிவில், முதலீடுகள், 35 சதவீதம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும், இணைய வசதி பெருக்கம், சிறிய நகரங்களுக்கும் விரிவடைதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், இந்தியா முழுக்க இந்த துறை வளர்சியை துாண்டுவதாக இருக்கும்.

6 மடங்கு வளர்ச்சி:

உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த 2017ம் ஆண்டிலிருந்து, 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 6 மடங்கு வளர்ந்துள்ளன.அதேசமயம், நுகர்வோர்களும், உணவு ஆர்டர் செய்வது, தேடுவது உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யும் நேரமும், இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த செலவிடும் நேரம், 2017ல், மாதத்துக்கு, 32 நிமிடங்களாக இருந்தது, 2019ல், மாதத்துக்கு, 72 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக உணவை, முதல் முறை ஆர்டர் செய்வதற்கு, தகவல் தொடர்பு வசதிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் பங்கு, 52 சதவீதமாகும்.இதனையடுத்து, விளம்பரங்கள், 19 சதவீதமாக இருக்கிறது. பெருநகரங்களில் இருப்போர், உயர் வருமான பிரிவினர் ஆகியோர் மீது விளம்பரங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில் புதியதாக இருந்தாலும், மிக வேகமாக இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இந்த உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில், 500க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளனர். நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

சாப்பாட்டில் ஒரு புரட்சி:

மேலும், ஆன்லைன் மூலமாக செலவழிப்பது, அடுத்த, 5 ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்து, 9.25 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.இருப்பினும், தற்போது, ஐந்தில் ஒருவர் மொபைல் செயலி மீது நம்பிக்கை குறைவுடன் இருக்கிறார்.இதுவரை ஆன்லைன் மூலம் முயற்சிக்காகததற்கு, வினியோகக் கட்டணம் காரணமென, 18 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர், தரம் காரணம் என, 13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

முதல் நிலை நகரங்களில், 29 சதவீதம் பேர், செயலி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் ஆன்லைன் ஆர்டர் செய்வதில்லை என தெரிவித்துள்ளனர்.இந்த உணவு தொழில்நுட்பம், இந்தியர்களின் சாப்பாட்டில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளது. தற்போது ஆரோக்கியமான, வீட்டில் தயாரிக்கப்படும் உணவுக்கான தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »