Press "Enter" to skip to content

சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி

சென்னை : சென்னையில் நடைபெறும், மூன்று நாள் தோல் கண்காட்சி வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, இந்திய தோல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தோல் கவுன்சில் தலைவர் பி.ஆர்.அகீல் அகமது, செயல் இயக்குனர் ஆர்.செல்வம் இருவரும் கூறியதாவது:‘இந்திய தோல் வாரம் 2020’ ஜனவரி, 27 முதல் பிப்ரவரி, 3ம் தேதி வரை கடைப்பிடிக்கப் படுகிறது. சந்திப்புஇதன் ஒரு பகுதியாக, 35வது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி, நாளை முதல், பிப்., 3ம் தேதி வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த, 350 நிறுவனங்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த, 150 நிறுவனங்களும், இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்கின்றன.இதில், தோல் தொழில் தொடர்பான மூலப்பொருட்கள், பணி நிறைவுற்ற பொருட்கள், உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் என, அனைத்தும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, எதிர்பார்க்கிறோம்.மேலும், பிப்., 1ம் தேதி, தோல் மூலப்பொருட்கள் ஆதார சந்திப்பும் நடைபெறுகிறது.

இதில், இந்திய நிறுவனங்கள் மற்றும் 30 வெளிநாட்டு தோல் வினியோகஸ்தர்களும் சந்தித்து பேசுகின்றனர்.வேலைவாய்ப்புதமிழகத்தில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீட்டில், சில நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்துள்ளன.அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தோல் தொழிற்சாலைகள் துவங்க, 100 ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பர்கூர், திண்டிவனம், காட்பாடி, இருங்காட்டுக் கோட்டை ஆகிய பகுதிகளில் நிலம் ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.தொழில் துவங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்ததும், அங்கு நிறுவனங்கள் தொழில் துவங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »