Press "Enter" to skip to content

ரூ.5,583 கோடி நிகரலாபம்.. இது தான் காலாண்டு லாபத்திலேயே அதிகம்.. எஸ்பிஐ அதிரடி..!

டெல்லி: நாட்டிலேயே மிகப்பெரிய முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 5,583.36 கோடி ரூபாய் நிகர லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த லாபம் இதுவரை கண்ட காலாண்டு லாபத்திலேயே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் கூட, முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 41.17% லாபம் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு தான் பொருளாதார ஆய்வறிக்கையில், முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் வங்கி துறையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வங்கி துறைக்கு இன்னும் ஊக்கம் கொடுக்கும் போது நல்ல செயல்பாட்டினை காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.

நிகரலாபம்

சொல்லப்போனால் எஸ்பிஐயின் நிகர லாபம் 5,583.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதுவரை காலாண்டு லாபத்தில் இந்த அளவுக்கு பெற்றதில்லை என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 3,955 கோடி ரூபாய் நிகர லாபத்தையும் பெற்றிருந்தது, இதே சுமார் 41.17% லாபம் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட்டி வருவாய் அதிகரிப்பு

வட்டி வருவாய் அதிகரிப்பு

பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனர் நிகர வட்டி வருவாய் 22.42% அதிகரித்து, 27,779 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 22,691 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே செப்டம்பர் காலாண்டில் 24,600 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

வட்டி அல்லாத வருவாய்

வட்டி அல்லாத வருவாய்

நிகர வட்டி வருவாய் தான் தாறுமாறாக அதிகரித்துள்ளது எனில், வட்டி அல்லாத வருவாய் கூட முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 19.30% அதிகரித்து, 5,635 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் இயக்க லாபம் 44.34% அதிகரித்து 18,223 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,625 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

செயல்படாத சொத்து மதிப்பு வீழ்ச்சி

செயல்படாத சொத்து மதிப்பு வீழ்ச்சி

எஸ்பிஐயின் மொத்த செயல்படாத சொத்தின் மதிப்பு 6.94% வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 8.71% ஆக இருந்தது. இதே நிகர வாராக்கடன் அளவும் 2.65% வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இது முந்தைய ஆண்டில் 3.95% ஆக இருந்துள்ளது. ஆக மொத்தம் மொத்த வாராக்கடன் அளவு 1.59 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முன்பு 1.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.

பங்கு விலை

பங்கு விலை

இதுவரை காலாண்டில் கண்டிராத அளவில் நிகரலாபம் கண்டுள்ளதாக இவ்வங்கி அறிவித்துள்ளதையடுத்து, இவ்வங்கி பங்கின் விலையானது 2.53% அதிகரித்து 318.55 ரூபாயாகவும் வர்த்தமாகி முடிவடைந்துள்ளது. எனினும் டிவிடெண்ட் போன்ற மற்ற எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. நல்ல லாபம் கண்டுள்ளதாலும், இது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்பதாலும், அதிலும் நாளை நடக்கவிருக்கும் பட்ஜெட்டில் நிச்சயம் பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான ஊக்குவிப்பு நடவடிக்கை இருக்கும் பட்சத்தில் இந்த வங்கி பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »