Press "Enter" to skip to content

பங்குச் சந்தைகளை பதம் பார்த்த, ‘வரவு செலவுத் திட்டம்’

மும்பை : சந்தையின் எதிர்பார்ப்புகளை, ‘பட்ஜெட்’ நிறைவேற்றவில்லை என்ற கோணத்தில், பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ 988 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரம் புள்ளிகள் என்ற அடையாள நிலையிலிருந்து குறைந்தது.நேற்றைய வர்த்தகத்தின் போது, நாளின் உச்ச நிலையிலிருந்து, 1,275 புள்ளிகள் அளவுக்கு சரிவு கண்டு, இறுதியில், 987.96 புள்ளிகள் சரிவுடன், 39735.53 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் அதிகபட்சமாக, 40905.78 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக, 39631.24 புள்ளிகளையும் தொட்டது.

இதை போலவே, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ 300.25 புள்ளிகள் சரிவை கண்டது. 2019ம் ஆண்டு பட்ஜெட்டின்போது இருந்த, 11811.15 புள்ளிகளை விட குறைந்து, இந்த பட்ஜெட்டின் போது, 11661.85 புள்ளிகளாக சரிந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ஐ.டி.சி., நிறுவனம், அதிகபட்சமாக, 6.97 சதவீதம் சரிவை கண்டது. இதையடுத்து, எல்., அண்டு டி., எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.

மாறாக, டி.சி.எஸ்., நிறுவன பங்குகள், 4.13 சதவீத உயர்வை கண்டன. இதையடுத்து, எச்.யு.எல்., நெஸ்லே இந்தியா, டெக் மகிந்திரா, இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தது.சந்தை சரிந்ததற்கு முக்கிய காரணம், முதலீட்டாளர்கள் மிக அதிகமான எதிர்பார்ப்பில் இருந்தது.நீண்ட கால மூலதன ஆதாய வரி குறைப்பு, துறைகளுக்கான பெரியளவிலான சலுகைகள் ஆகியவை குறித்து எதுவும் இல்லாததும், சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிக ஏற்றத்தில் ஐ.டி.பி.ஐ.,ஐ.டி.பி.ஐ., நிறுவனத்தில், அரசின் வசம் இருக்கும் மீதி பங்குகளும் விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்ததை அடுத்து, இந்நிறுவன பங்கு விலை, 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவன பங்கு விலை, 17.55 சதவீதம் அதிகரித்து, 39.85 ரூபாயாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில், 18 சதவீதம் அதிகரித்து, 39.90 ரூபாயாக உயர்ந்தது.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »