Press "Enter" to skip to content

வரவு செலவுத் திட்டம் அறிவிப்பால் கலக்கம் காப்பீட்டு நிறுவனங்கள் கடைத்தேறுமா?

புதுடெல்லி: ஆபத்து காலத்தில் உதவும் என்று மட்டுமல்ல, வரி சேமிப்புக்காகவும் காப்பீடுகளில் மக்கள் முதலீடு செய்கின்றனர். அதிலும், மாதச்சம்பளதாரர்கள் வரி சேமிப்புக்காக முதலில் நாடுவது காப்பீடுகளைத்தான். அதற்கு அடுத்ததாக  சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்துகின்றனர். சம்பளத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்வதை தவிர்க்க, கடைசி நேரத்தில் காப்பீடு பிரீமியம் செலுத்துபவர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும், காப்பீட்டு துறை ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டுதான்  இருக்கிறது. இந்நிலையில் பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்பு இத்துறையை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், பங்குச்சந்தையில் காப்பீடு துறை பங்குகளின் மதிப்பு திடீரென சரிந்தது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிவிப்பில், வரி விகித முறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில பிரிவுகளில் வரி குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டங்களில்  முதலீடு செய்ததற்கு வரி கழிவை கோருவோருக்கு, புதிய வரி விதிப்பு கிடையாது. அதாவது, வரிக்கழிவு சலுகைகளை விட்டுக்கொடுத்தால் மட்டுமே அவர்கள் புதிய வரி பிரிவுக்குள் வருவார்கள். இந்த முடிவை வரி செலுத்துவோருக்கே விட்டு  விட்டது மத்திய அரசு.

 சில வருவாய் பிரிவுகளில் பழைய வரி விதிப்புதான் லாபம். சில சம்பள உச்சவரம்பில் புதிய வரி விதிப்பு ஏற்றது. அதுமட்டுமின்றி, ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த  உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. எனினும், வரி செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு கூறிவிட்டது. இதனால், இந்த சம்பள பிரிவில் இருப்பவர்களும் இனி காப்பீடு முதலீடுகள் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.  ஜிஎஸ்டி உட்பட மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளாலும், பொருளாதார மந்த நிலையாலும் பாதிக்கப்பட்ட துறைகளில் காப்பீடு துறையும் ஒன்று. இதனால் இந்த துறையின் வளர்ச்சி மந்த நிலையிலேயே இருக்கிறது. கடந்த 2018ல் இந்த  துறையின் வளர்ச்சி 2.74 சதவீதம் மட்டுமே. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு, 80 சி பிரிவில் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுக்கும், 80 டி பிரிவில் மருத்துவகாப்பீடு முதலீட்டுக்கும் வரிச்சலுகை கோர வேண்டிய அவசியம்  இல்லை. எனவே, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய காப்பீடு திட்டங்களை அறிவித்தால் மட்டுமே வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளன என காப்பீடு துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

 காப்பீடு துறை தொடர்பாக, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுபாஷ் குந்தியா கடந்த மாதம் அளித்த பேட்டியில், ‘‘காப்பீடு நிறுவனங்களின் பிரீமியம் வசூலில் பெரும்பாலான தொகை காப்பீட்டுக்கே  போய்விடுகிறது. எனவே, பிரீமியம் தொகையை உயர்த்தாவிட்டால் காப்பீடு நிறுவனங்களால் கடும் நஷ்டத்தை தொடர்ந்து தாங்க முடியாது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்’’ என எச்சரித்திருந்தார். இந்த  சூழ்நிலையில், பட்ஜெட் அறிவிப்பால், காப்பீடு திட்டங்களில் முதலீடுகள் குறையலாம் என்ற அச்சம் உள்ளதாக காப்பீட்டு துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.  பொதுவாக, வரிச்சலுகைக்காக ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ம்  காலாண்டில்தான் காப்பீடு பிரீமியத்தில் பணம் செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம் நடப்பு நிதியாண்டில் இது பாதிக்காது. எனினும், நீண்ட கால அடிப்படையில் இத்துறைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் எனவும் அவர்கள்  தெரிவிக்கின்றனர்.

சேமிப்பு திட்டங்களுக்கும் ஆபத்து
காப்பீடுகளை போலவே சேமிப்பு திட்டங்களிலும் வரி சேமிப்புக்காக முதலீடு செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத வரையிலான புள்ளி விவரத்தின்படி, பங்குச்சந்தையுடன் தொடர்புடைய சேமிப்பு திட்டங்களில் ₹1.04 லட்சம் கோடி முதலீடு  செய்யப்படுகிறது. எஸ்ஐபி திட்டங்களில் மாதத்துக்கு சுமார் ₹8,000 கோடி முதலீடு செய்கின்றனர். பட்ஜெட் அறிவிப்பால் சேமிப்பு திட்டங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »