Press "Enter" to skip to content

நீங்கா நினைவுகள்: ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம் – சாதித்த சாதனை நாயகன்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச்சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தான் சச்சின் டெண்டுல்கர் தன்வசமாக்கினார்.

மும்பை:

பிரிட்டனில் விளையாடப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு, 19ம் நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கியது. இந்த போட்டிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளும் இப்போட்டியை விளையாட ஆரம்பித்தன. சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவும் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் காட்டியது.

முதலில் 5 நாட்கள் தொடர்ந்து விளையாடும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே உலக நாடுகளிடையே நடைபெற்று வந்தது. அதன் பின்னர் 60 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளாக விளையாடப்பட்டது. ஒருநாள் போட்டி 50 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளும் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

அவ்வகையில், ஒருநாள் போட்டிகளில் தனிநபராக அதிகபட்ச ரன்கள் (194) எடுத்த வீரர்களின் வரிசையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தானின் சயீத் அன்வர். அவரது சாதனையை யார் முறியடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரம் அது.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (பிப்ரவரி 24, 2010) குவாலியர் மைதானத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அப்போதைய இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடக்கூடிய சேவாக் 4-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி துரிதமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், அனுபவ வீரராக சச்சின் டெண்டுல்கர் துரிதமாக ரன் குவித்து விளையாடினார். தினேஷ் கார்த்திக்கும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். இந்த இன்னிங்ஸின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களும் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை சச்சின் படைத்தார். இந்த கிரகத்தில் 200 ரன்கள் எட்டிய முதல் மனிதர், இவர் இந்தியாவை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர். 147 பந்துகளில் 200 ரன்கள். டேக் எ பவ் மாஸ்டர்,” என்று சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் எட்டியவுடன் அப்போதைய வர்ணனையாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

சச்சினின் இரட்டை சதத்துக்கு பின்னர் ஏழு இரட்டை சதங்கள் விளாசப்பட்டன. இந்திய வீரர்களான வீரேந்தர் சேவாக் ஒரு இரட்டை சதமும் மற்றும் ரோஹித் ஷர்மா மூன்று இரட்டை சதங்களையும் குவித்துள்ளனர். மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் மார்ட்டின் குப்டில் மற்றும் பாகிஸ்தானின் ஃபக்கர் ஜமான் ஆகியோர் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »