Press "Enter" to skip to content

கொரோனா தாக்குதல் மோசமான நிலையை அடைந்ததால் லா லிகா போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

ஸ்பெயின் நாட்டில் நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து வருவதால் லா லிகா கால்பந்து போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. முதலில் இத்தாலி நாட்டில் பரவியது. இதன் தாக்கத்தை அறியாமல் ஐரோப்பா நாடுகள் கால்பந்து லீக்குகளை தொடர்ந்து நடத்தி வந்தன. குறுகிய நாட்களுக்குள் ஸ்பெயின், பிரான்ஸ் என விஸ்வரூபம் எடுத்து பரவத்தொடங்கியது.

இதனால் போட்டிகளை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் வைத்து நடத்தின. ஆனால் கொரோனா வைரஸ் கட்டுங்கடங்காத வகையில் ருத்ரதாண்டவம் ஆட அனைத்து லீக்குகளும் தள்ளி வைக்கப்பட்டன.

ஸ்பெயின் நாட்டில் நடத்தப்படும் உலகளவில் முன்னணி லீக்கான லா லிகா கால்பந்து போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்திற்குள் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துவிடும். அதன்பிறகு போட்டியை நடத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தது.

ஆனால் ஸ்பெயின் நாட்டில் இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை சகஜ நிலை திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லா லிகா மற்றும் ஸ்பெயின் கால்பந்து பெடரேசன் இணைந்து காலவரையின்றி லா லிகா கால்பந்து லீக் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »