Press "Enter" to skip to content

இந்திய வீரர்களின் ஊதியம் பிடித்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: பிசிசிஐ

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின் ஊதியம் பிடித்தம் குறித்து பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை என பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டி ஏதும் நடைபெறவில்லை. மீண்டும் எப்போது கிரிக்கெட் தொடங்கும் என்பதை யாராலும் உறுதி்யாக சொல்ல முடியாத நிலை தற்போது நிலவி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்குகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு கிளக் அணிகளும் கோடிக்கணக்கில் இழப்பை சந்திக்க நேரிடும். இதனால் வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது, பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி ஊதியம் பிடித்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால் பிசிசிஐ பொருளாளர் இதை மறுத்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறுகையில் ‘‘நாங்கள் ஊதியம் பிடித்தம் குறித்து பேசவில்லை. இந்த பின்னடைவுக்குப் பிறகு என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும், அனைவரின் நலனை கருத்தில் கொண்டுதான் எடுக்கப்படும். எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும் நன்றாக சிந்திக்க வேண்டும். தற்போது அதுகுறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. இது உண்மையிலேயே மிகப்பெரிய பின்னடைவுதான். நாங்கள் எடுக்கும் முடிவால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. இதுகுறித்த இறுதி நிலைக்கு வந்தபின், விவாதிக்க முடியும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »