Press "Enter" to skip to content

உலக கோப்பையை வெல்ல டோனியின் சிக்சர் மட்டும் காரணமல்ல – கம்பீர் காட்டம்

டோனியின் சிக்சர் மட்டும் காரணமல்ல. இந்திய அணியின் ஒருங்கிணைந்த முயற்சியால் தான் உலக கோப்பையை வென்றோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை உச்சி முகர்ந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றியை தன்வசப்படுத்தியது. ஆட்டம் இழக்காமல் 91 ரன்கள் சேர்த்த டோனி சிக்சர் விளாசி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினார். யுவராஜ்சிங் 21 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். தொடக்க விக்கெட்டுகள் விரைவில் சரிந்த நிலையில் நிலைத்து நின்று விளையாடி 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த கவுதம் கம்பீர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆட்டநாயகனாக டோனியும், தொடர் நாயகனாக யுவராஜ்சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய அணி உலக கோப்பையை வென்றது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1983-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்தில் உலக கோப்பையை வென்று சாதித்து இருந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பையை வென்று 9 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று அந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்கள் உள்பட பலரும் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து கொண்டாடினார்கள்.

இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி சிக்சர் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட கிரிக் இன்போ இணையதளம், ‘இந்த ஷாட் மில்லியன் இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது’ என்று குறிப்பிட்டு இருந்தது. டோனியின் சிக்சர் தான் வெற்றிக்கு காரணம் என்பது போல் வெளியிடப்பட்ட இந்த படத்தால் கவுதம் கம்பீர் கடும் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா கட்சி டெல்லி எம்.பி.யு.மான கவுதம் கம்பீர் காட்டமாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஒரு சிறிய நினைவூட்டல். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை ஒட்டுமொத்த இந்தியாவும், இந்திய அணியும், பயிற்சியாளர்களும் ஒருங்கிணைந்த முயற்சியால் வென்றார்கள். சிக்சர் மீதான உங்களின் அதீத விருப்பத்தை கைவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கம்பீர் தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘நாடு நமக்கு என்ன செய்தது எனக் கேட்கிறார்கள். நிஜமான கேள்வி நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்பது தான். கொரோனா தடுப்பு பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கான எனது 2 ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் மற்றவர்களும் தாராளமாக நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். ஏற்கனவே அவர் தனது உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »