Press "Enter" to skip to content

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் – மல்யுத்த வீரர் சுஷில்குமார் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கூறினார்.

புதுடெல்லி:

இந்திய மூத்த மல்யுத்த வீரர் சுஷில்குமார், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் சுஷில்குமார் தான்.

இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் அவர் தடுமாற்றம் கண்டார். அவருக்குரிய வாய்ப்பு வெகுவாக மங்கி போய் இருந்தது. இந்த சூழலில் கொரோனா அச்சத்தால் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் திருவிழா அடுத்த ஆண்டுக்கு (2021) தள்ளிவைக்கப்பட்டது. இதனால் 36 வயதான சுஷில்குமாருக்கு மறுபடியும் ஒலிம்பிக் வாய்ப்பு துளிர்விட்டுள்ளது. இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மல்யுத்தத்தில் இனி சுஷில்குமார் கதை முடிந்தது, அவரால் ஜொலிக்க முடியாது என்று சொல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. இப்போதைக்கு நான் எங்கும் போகப்போவதில்லை. ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டதால் எனக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. அதாவது இன்னும் சிறப்பாக தயாராக நேரம் கிடைத்திருக்கிறது.

மல்யுத்த விளையாட்டை பொறுத்தவரை காயமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நன்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி உழைக்க வேண்டும். இதை சரியாக செய்தால் இலக்கை அடைய முடியும். இப்போது நான் தினமும் வீட்டில் இரண்டு முறை பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

மல்யுத்தத்திற்கு ஏற்ப என்னை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். கடவுளின் கருணையோடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு என்னால் தகுதி பெற முடியும். தகுதி சுற்றில் என்னால் வெற்றி பெற முடியுமா? என்று கேட்கிறீர்கள். 2011-ம் ஆண்டு இதே போல் தான் சொன்னார்கள். அப்போது சாதித்து காட்டினேன். எனவே இது போன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்கு தெரியும்.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய சக வீரர் நார்சிங் யாதவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு கால தடை ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால், அவரை தகுதி சுற்றில் எதிர்கொள்ள வேண்டியது இருக்குமே என்று கேட்கிறீர்கள். அதற்குரிய நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்க இருக்கும் அவருக்கு எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

சக இந்திய வீரர்களைத் தான் நீங்கள் கடுமையான போட்டியாளராக கருதுகிறீர்களா என்று கேட்கிறீர்கள். எப்போதும் சிறிய அளவில் யோசித்தால் நீங்கள் எதுவும் சாதிக்க முடியாது. சர்வதேச அளவிலான வீரர்களைத் தான் நான் பிரதான எதிராளிகளாக பார்க்கிறேன். குறிப்பாக ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் வீரர் பெக்ஜோட் அப்துராக்மோனோவை வலுமிக்க எதிராளியாக கருதுகிறேன். அவர் சிறந்த வீரர். அவர் போன்ற வீரர்களை மனதில் வைத்து என்னை தயார்படுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு சுஷில்குமார் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »