Press "Enter" to skip to content

மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டொ திரும்புகிறார்?

போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்கு திரும்பும் வாய்ப்புள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த பல வருடங்களாக லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்துள்ளார். 100 மில்லியன் பவுண்டுக்கு கடந்த 2018-ல் யுவென்டஸ் அணிக்கு மாறினார்.

தற்போது வரை யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ 75 போட்டிகளில் 53 கோல்கள் அடித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் ஒவ்வொரு கிளப்புகளும் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகின்றன. இனிமேல் எப்போது கால்பந்து போட்டிகள் தொடங்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

கிளப்புகள் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருப்பதால் வீரர்கள் தங்களது சம்பளங்களை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன. யுவென்டஸ் அணி ரொனால்டோவுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் 27.5 மில்லியன் பவுண்டு சம்பளமாக கொடுக்கிறது. இப்படி முன்னணி வீரர்களுக்கு கொடுக்க இருப்பதால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என யுவென்டஸ் நினைப்பதாக இத்தாலி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனால் ரியல் மாட்ரிட் அணி விரும்பினால் 50 மில்லியன் பவுண்டுக்கு கொடுக்க யுவென்டஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால் ரொனால்டோ மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட முடியும். மெஸ்சி – ரொனால்டோ இடையிலான பலப்பரீட்சையை ரசிகர்கள் காணலாம்.

ஆனால் யுவென்டஸ் வீரர்கள் சம்பளத்தை குறைக்க ஒப்புக் கொண்டதால் அந்த அணிக்கு நான்கு மாதங்களில் 80 மில்லியன் பவுண்டு வரை கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ரொனால்டோ 10 மில்லியன் பவுண்டு இழக்க நேரிடும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »