Press "Enter" to skip to content

இந்திய மண்ணில் சோதனை தொடரை வெல்ல வேண்டும்: இதுதான் மிகப்பெரிய இலக்கு என்கிறார் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்மித்தின் மிகப்பெரிய இலக்கு, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதானாம்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் இந்திய மண்ணில் டெஸ்டில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

அதன்பின் இந்திய மண்ணில் 2017-ம் ஆண்டு சுற்றுப் பயணம் செய்தபோது முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா தொடரைக் கைப்பற்றியது. ஒரு போட்டி டிரா ஆனது.

இந்தத் தொடரில் ஸ்மித் மூன்று சதங்களுடன் அதிக அளவில் ரன்கள் குவித்தாலும் தொடரை வெல்ல அவரது ரன்கள் உதவியாக இல்லை. இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் கைப்பற்றுவதை விரும்புவேன். ஆஸ்திரேலிய வீரர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசும்போது ஆஷஸ் தொடர், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மிகப்பெரியது என்பார்கள். ஆனால், தற்போது இந்தியா நம்பர் ஒன் அணியாக உள்ளது. இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது மிகக்கடினம். ஆகவே, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதை விரும்புவேன்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் எனக்கு மிகப்பெரிய இலக்கு ஏதும் கிடையாது. ஒவ்வொரு நாள், ஒவ்வொரு தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்ற இலக்கு உண்டு’’என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »