Press "Enter" to skip to content

உடற்பயிற்சி, சமையல் வேலைகள் செய்து நேரத்தை போக்குகிறேன் – மந்தனா

வீட்டில் முடங்கி இருக்கும் இந்த தருணத்தில் உடற்பயிற்சி மற்றும் சமையல் வேலைகளை செய்து நேரத்தை போக்குகிறேன் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை மந்தனா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ருத்ரதாண்டவம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் வீரர், வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி யாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்த சிரமமான நேரத்தை எப்படி செலவிடுகிறார் என்பது குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனையான மராட்டியத்தை சேர்ந்த 23 வயது ஸ்மிரிதி மந்தனா பேசி இருக்கும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘நாங்கள் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் மூலமாக பகடைக்காய் விளையாட்டு விளையாடி வருகிறோம். அது எங்கள் அணியினர் இடையிலான பிணைப்பை தொடர வைக்கிறது. இந்த காலகட்டத்தில் உடல் தகுதியுடன் நிலைத்து இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எனவே நான் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தொடர்ந்து டிரெய்னருடன் பேசி அவரது கருத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி உடற்தகுதி விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன். அவர் தாங்கள் பின்பற்ற வேண்டிய பயிற்சிகள் குறித்து தொடர்ந்து தகவல் அளித்து வருகிறார்.

மற்றபடி குடும்பத்தினருடன் எனது நேரத்தை செலவழித்து வருகிறேன். நாங்கள் ஒன்றாக இணைந்து பலவகையான சீட்டாட்டத்தில் ஈடுபடுகிறோம். என் அம்மாவின் சமையல் பணிகளில் உதவுகிறேன். பாத்திரங்களை கழுவிக் கொடுப்பது எனது அன்றாட வேலைகளில் ஒரு அங்கமாகி விட்டதாக நான் நினைக்கிறேன். எனது சகோதரனுக்கு அன்பு தொல்லை கொடுத்து வருகிறேன். இது எனக்கு பிடித்தமான ஒரு பொழுது போக் காகும்.

அடுத்தபடியாக எனக்கு சினிமா படங்கள் பார்ப்பது பிடிக்கும். சினிமா பார்ப்பதில் நான் அதிகம் ஆர்வம் காட்டுவேன். ஒரு வாரத்தில் இரண்டு முதல், மூன்று சினிமா படங்கள் பார்த்து விடுவேன். அதற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக அதற்கு அதிகமாக படங்கள் பார்ப்பது கிடையாது. எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடவே விரும்புகிறேன்.

வீட்டில் இருக்கும் போது முக்கியமாக நான் செய்வது நன்கு தூங்குவது தான். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது தூங்கி, அந்த நாள் முழுக்க என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உங்களை தகுதியுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »