Press "Enter" to skip to content

ஊரடங்கு நீட்டிப்பு: தேசிய ஹாக்கி போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைப்பு

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய ஹாக்கி போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி:

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நமது நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவுக்கு வர இருந்த இந்த ஊரடங்கை அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமர் மோடி நேற்று காலை அறிவித்தார்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி ராஞ்சியில் முறையே வருகிற 29-ந்தேதி முதல் மே 9-ந்தேதி வரையும், மே 7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும் நடைபெற இருந்த தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), சென்னையில் முறையே மே 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையும், மே 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் நடக்க இருந்த தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), அரியானா மாநிலத்தில் முறையே மே 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், மே 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும் நடைபெற இருந்த தேசிய சப்ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), மணிப்பூரில் முறையே மே 28-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரையும், ஜூன் 3-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும் நடக்க இருந்த தேசிய சப்ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி ( பி மற்றும் ஏ டிவிசன்), கவுகாத்தியில் ஜூன் 20-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை நடைபெற இருந்த தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி டிவிசன்) ஆகியவை மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன.

இது குறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி அமைப்பாளர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் மற்றும் எங்களது பங்குதாரர்களின் நலன் கருதி இந்த ஆண்டுக்கான எஞ்சிய தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை தள்ளிவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் காலவரையின்றி தள்ளிபோடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு நிலைமை சரியானதும் ஆய்வு செய்து போட்டிக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும். போட்டி தள்ளிவைப்புக்கு ஒத்துழைப்பு அளித்த போட்டி அமைப்பாளர்களுக்கும், மாநில அமைப்பு நிர்வாகிகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

இதேபோல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி முகாம்கள் தொடர்ந்து மே 3-ந்தேதி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெங்களூரு மற்றும் பாட்டியாலாவில் உள்ள சாய் பயிற்சி மையங்களில் இருக்கும் வீரர்கள் தொடர்ந்து அங்கு தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தங்களது அனைத்து கால்பந்து போட்டிகளும் தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »