Press "Enter" to skip to content

ஐபிஎல் 2020 பருவம் நடக்காவிடில் டோனிக்கு சிக்கல் அதிகரிக்கும்: மதன் லால் சொல்கிறார்

எம்எஸ் டோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு ஐபிஎல் முக்கிய துருப்புச் சீட்டாக கருதப்பட்ட நிலையில், கொரோனா வில்லனாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்குப்பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய பின்னர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எம்எஸ் டோனி இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஐபிஎல் 2020 சீசனில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்ப பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை என்றால், எம்எஸ் டோனிக்கு சிக்கல் அதிகமாகிவிடும் என முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

மதன் லால் இதுகுறித்து கூறுகையில் ‘‘எம்எஸ் டோனிக்கான சிக்கல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். உலக கோப்பைக்குப்பின் அவர் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை என்றால், அவருக்கான சிக்கல் மேலும் அதிகமாகிவிடும். அணி நிர்வாகம், ரவி சாஸ்திரி, விராட் கோலி அல்லது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

டோனி முதலில் விளையாட வேண்டும். அதன்பின் தேர்வு செய்யலாம் என தேர்வுக்குழுவினர் விரும்புவார்கள். அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள்தான் மிகப்பெரிய பொறுப்பு. சிக்கல் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன். அவர் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி விட்டார். சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர்தான் தேர்வாளர்களுக்கு சொல்ல வேண்டும். அப்போதுதான் தேர்வாளர்கள் அவருடைய எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »