Press "Enter" to skip to content

உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய மகளிர் அணி தகுதி

12-வது உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி 23 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.

துபாய்:

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து கோப்பையை வென்றது.

12-வது உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7 -ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது.

இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் நியூசிலாந்து நேரடியாக தகுதி பெற்றது. 4 இடங்களுக்கு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 7 சுற்றுகள் நடந்தன.

தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா, இலங்கை நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ரத்தானது. இதையடுத்து முதல் 3 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா (37 புள்ளி), இங்கிலாந்து ( 29), தென் ஆப்பிரிக்கா (25) அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெற்றன.

மீதமுள்ள ஒரு இடத்துக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு இருந்தது. கடந்த ஆண்டு இரு அணிகள் மோத இருந்த கடைசி சுற்று அரசியல் பிரச்சினை காரணமாக ரத்தானது. இதனால் இரு அணிளுக்கும் சமமாக புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதன்படி இந்திய அணி 23 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானுக்கு( 19 புள்ளி) 5-வது இடம் கிடைத்தது.

உலக கோப்பை மகளிர் போட்டிக்கு இதுவரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 5 அணிகள் தகுதி பெற்றன.

மீதமுள்ள 3 இடங்களுக்கான தகுதி சுற்று போட்டி ஜூலை மாதம் இலங்கையில் நடக்கிறது.

இதில் இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, அமெரிக்கா, தாய்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூகினியா ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பையை கைப்பற்றி உள்ளன. இந்திய அணி இரண்டு முறை 2 வது இடத்தைப் பிடித்ததே சிறந்த நிலையாகும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »