Press "Enter" to skip to content

சமூக வலைதளம் மூலம் சூதாட்ட புரோக்கர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் – கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட புரோக்கர்கள் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்று ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

லண்டன்:

உலகையே ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் விளையாட்டு உலகம் முற்றிலும் நிலைகுலைந்து போய் விட்டது. கடந்த மார்ச் 13-ந்தேதிக்கு பிறகு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. உள்ளூர் போட்டிகளும் காலவரையின்றி நிறுத்தப்பட்டு விட்டன. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது கருத்துகளை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்கள். முன்னாள் வீரர்களுடன் ருசிகர விவாதங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சூதாட்ட புரோக்கர்கள் கிரிக்கெட் வீரர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மார்ஷல் கூறுகையில், ‘சூதாட்ட புரோக் கர்கள் தற்போதைய சூழலை பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை அறிகிறோம். கிரிக்கெட் வீரர்கள் முன்பு எப்போதையும் விட இப்போது சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் சூதாட்டக்காரர்கள், வீரர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, நட்பு வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த வகையில் சிக்கும் வீரர்களை பிற்காலத்தில் அவர்கள் ‘மேட்ச் பிக் சிங்’சில் ஈடுபடுத்த முடியும்.

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் சூதாட்ட புரோக் கர்கள் இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் எங்களது உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இது பற்றி கூறியுள்ளோம். சூதாட்டக்காரர்கள் அணுகும் ஆபத்து உள்ளதால், வீரர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றார்.

கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 2 மாதங்களுக்கு தொடங்க வாய்ப்பில்லை. போட்டிகள் ரத்தானதால் வீரர்களின் வருமானம் வெகுவாக சரிந்துள்ளது. குறைவான ஊதியம் பெறும் வீரர்கள் சூதாட்ட பேர்வழிகள் வீசும் ஆசைவலையில் எளிதில் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் கூறுகையில், ‘எந்த வழிகளில் எல்லாம் சூதாட்ட புரோக்கர்கள் தொடர்பு கொள்வார்கள் என்பதை எங்களது வீரர்களுக்கு தெரிவித்து இருக்கிறோம். ரசிகர் போன்று நடந்து கொண்டு, பிறகு வேறு நபர் மூலம் உங்களை நேரில் சந்திக்க முயற்சிக்கலாம். எது எப்படியோ, இந்திய வீரர்கள் சந்தேகப்படும் யார் தொடர்பு கொண்டாலும் உடனடியாக எங்களது கவனத்துக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளது. வீரர்களும், நாங்களும் ஒரே அணியாக செயல்படுகிறோம்’ என்றார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை தலைமை நிர்வாகி ஜேம்ஸ் பைமன்ட் கூறுகையில், ‘எங்களது வீரர்கள் சரியான விஷயங்களையே செய்வார்கள் என்று நம்புகிறேன். நாம் மனஉறுதியுடன் வலுவாக இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்கு இதுவே சரியான நேரம்’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »