Press "Enter" to skip to content

நான்சட்டையை கழற்றியதை யாரும் கவனிக்காததால் தப்பினேன்: யுவராஜ் சிங்

நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தில் நானும் சட்டையை கழற்றினேன், ஆனால் தப்பித்து விட்டேன் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது என்ற விமர்சனம் எப்பொழுதுமே உண்டு. 2002-ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா சேஸிங் செய்ய களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா 146 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் கைப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 121 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. யுவராஜ் சிங் 69 ரன்களும், முகமது கைப் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் அடித்தனர்.

இந்தியா வெற்றி பெற்ற பிறகு கேப்டன் கங்குலி டிரெஸ்சிங் ரூமில் இருந்து சட்டையை கழற்றி கையில் வைத்து சுற்றினார். அதேபோல் யுவராஜ் சிங்கும் சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடினார்.

சட்டையை கழற்றியதால் கங்குலி விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் நான் அதில் இருந்து தப்பினேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘வெளிநாட்டு தொடர்களில் நாம் இதற்கு முன் 9 அல்லது 10 இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம். வெளிநாட்டு மண்ணில் சாதனைகள் படைத்தது கிடையாது. நாங்கள் அப்போது புதிய அணி. சவுரங் கங்குலி எங்களுக்கு அதிக அளவில் ஆதரவு கொடுத்தார்.

இங்கிலாந்து 325 ரன்கள் அடித்த பின்னர் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தோம். இதுபோன்ற டார்கெட்டை சேஸிங் செய்வது மிகவும் எளிதானது அல்ல. எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது, ஆனால் சச்சின் தெண்டுல்கர் ஆட்டமிழந்த பின், இங்கிலாந்து வீரர்கள் கோப்பையை வென்று விட்டதாகவே சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

நாங்கள் 146 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஏறக்குறைய 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் இருந்து சென்று விட்டனர். அடுத்து கைப் களம் இறங்கினார். அவரிடம் நான் விளையாடுவோம் என்றேன். நாங்கள் ஏற்கனவே 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் இணைந்து விளையாடியதால் விக்கெட்டுகளுக்கு இடையில் சிறப்பாக ஓடினோம். பந்தை சிறப்பாக அடித்தோம். நான் சற்று அதிரடியாக விளையாடினேன்.

நான் ஆட்டமிழந்த பின்னர் கைப் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் விளையாடியது கைப்-பின் சிறந்த ஆட்டமாக இருக்கும். நான் கொஞ்சம் யோசித்திருந்தால் என்னால் சதம் அடித்திருக்க முடியும்.

நான் என்னுடைய சட்டையை கழற்றி சந்தோசத்தை வெளிப்படுத்தினேன். இங்கிலாந்தில் குளிர் அடிக்கும் என்பதால் நான் உள்ளே டி-சர்ட் அணிந்திருந்தேன். இதனால் என்னை யாரும் கவனிக்கவில்லை. டி-சர்ட் என்னைக் காப்பாற்றியது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »