Press "Enter" to skip to content

உலக சோதனை சாம்பியன்ஷிப் போட்டி தள்ளி வைக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நாளை ஆலோசனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை தள்ளி வைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.

மும்பை:

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா இலங்கை இடையே ஜூன் மாதம் நடைபெற இருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. ஐ.சி.சி.யில் முழுநேர உறுப்பினராக இருக்கும் அனைத்து தலைமை நிர்வாகக் குழுவினருடன் வீடியோ கான்பரன் சிங் மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் செயலாளர் ஜெய்ஷா காணொளியில் பங்கேற்பார். இந்த கூட்டத்தில் எதிர் காலத்தில் நடைபெற இருக்கும் போட்டிகள் குறித்து விவாதிக்கப்படும். இருநாடுகள் இடையேயான பல்வேறு தொடர்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகி வருவது குறித்து ஆலோசிக்கப்படும்.

ஐ.சி.சி.யின் இந்த கூட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை தள்ளி வைப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். இந்த போட்டி தள்ளிவைக்கப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

இதேப்போல ஒருநாள் போட்டி சூப்பர் லீக் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இறுதிப்போட்டி 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் நடக்கிறது.

9 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் ஆடும். இறுதிப்போட்டி 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா 360 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 9 டெஸ்டில் விளையாடி 7-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ,தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வங்காளதேசம் ஆகிய அணிகள் 2 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »