Press "Enter" to skip to content

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் குறைக்கப்படாது – வாரிய பொருளாளர் உறுதி

நிதி இழப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளிபோடப்பட்டும் இருக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. நிதி பிரச்சினையை எதிர்கொண்டு திறம்பட கடந்து செல்ல முடியும் என்று நம்புகிறோம். ஐ.பி.எல். போட்டி நடக்காமல் போனால் அது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாகும். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் சம்பள பிடித்தம் குறித்து சிந்திப்போம். ஆனால் அது கடைசியான வாய்ப்பாக தான் இருக்க முடியும்.

வீரர்களின் சம்பளத்தை குறைக்காமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை எல்லாம் நாங்கள் செய்வோம். ஊழியர்கள் சம்பளம் உள்பட மற்ற செலவினங்களை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் நிதி இழப்பை சரிகட்டும் வகையில் எங்களது வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறோம்‘ என்று தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »