Press "Enter" to skip to content

உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டிக்கு வாய்ப்பு: மார்க் டெய்லர் சொல்கிறார்

டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டிக்கு வாய்ப்பு ஏற்படும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி மற்றும் ஐரோப்பிய கால்பந்து ஆட்டம் இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதேப்போல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் ரத்தானது. இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி. ஒத்திவைக்கப்பட்டது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த ஐசிசி திட்டமிடப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 30 தேதி வரை வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா வர அந்நாடு தடை விதித்துள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பையின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வருகிற 28-ம்தேதி 20 ஓவர் உலக கோப்பை குறித்து விவாதிக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கருத்து இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு ஐ.சி.சி. இந்த வி‌ஷயத்தில் இறுதி முடிவை எடுக்கும்.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஒத்தி வைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியை நடத்த வழிவகுக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்க் டெய்லர் கூறியதாவது;-

20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்படவே அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன். 15 நாடுகள், 45 ஆட்டங்கள், 7 மைதானங்களுக்கு பயணம் போன்றவைகள் கடினமானது. 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்துதல் என்பது இன்னும் கடினமானது. எனவே திட்டமிட்டபடி இந்தப் போட்டி நடைபெறாது என்றே நினைக்கிறேன்.

20 உலகக் கோப்பையை ஐ.சி.சி .ஒத்திவைத்தால் ஐ.பி.எல். போட்டியை நடத்த வழிவகை ஏற்படும். இதற்கான சூழ்நிலையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தும்.

20 ஒவர் உலக கோப்பையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தள்ளிவைக்க பேசப்படலாம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தியா இங்கிலாந்து தொடர் நடைபெறுகிறது. இதனால் இதிலும் சிக்கல் உருவாகலாம்.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இதனால் ஒரே ஆண்டில் இரண்டு உலகக்கோப்பை போட்டி நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »