Press "Enter" to skip to content

இங்கிலாந்து சுற்று பயணத்துக்கு எந்த வீரரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் – ஹோல்டர்

இங்கிலாந்து சுற்று பயணத்துக்கு எந்த ஒரு வீரரையும், கட்டாயப்படுத்த மாட்டோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ்டன்:

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க அணி இந்திய பயணத்தை பாதியில் முடித்து கொண்டது. இங்கிலாந்து அணி இலங்கை பயணத்தை ரத்து செய்தது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வருகிற 1-ந் தேதி முதல் விளையாட்டு போட்டிகளுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே ஜூலை 1-ந் தேதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, 1-ந் தேதி முதல் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் தொடங்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்நிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்டு தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இங்கிலாந்து சுற்று பயணத்துக்கு எந்த ஒரு வீரரையும், கட்டாயப்படுத்த மாட்டோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடும், ஒவ்வொரு வீரரும், பாதுகாப்பை உணர வேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக விமானத்தில் பறக்கும்போது நல்ல சூழல் அமையவேண்டும். என்னை பொறுத்தவரை நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.

பாதுகாப்பான சூழலில் மட்டுமே இங்கிலாந்துக்கு செல்வோம் என்று வெஸ்ட் இண்டீஸ் உறுதி அளித்துள்ளது.

இவ்வாறு ஹோல்டர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »