Press "Enter" to skip to content

பந்தை எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம் – ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட்

பந்தை எச்சிலால் தேய்ப்பது இயல்பாக நடக்கக்கூடியது என்பதால் அதை தடுப்பது கடினம் என்று ஆஸ்திரேலிய பவுலர் ஹசில்வுட் கூறியுள்ளார்.

சிட்னி:

எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால், கிரிக்கெட் போட்டிகளின் போது பவுலர்கள் பந்தை எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அதே சமயம் பந்தை வியர்வையால் தேய்க்க அனுமதி வழங்கப்படுகிறது. தற்காலிக நடவடிக்கையாக இந்த புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

பொதுவாக பந்து ‘ஸ்விங்’ ஆக வேண்டும் என்பதற்காக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் ஒரு பகுதியை கடினத்தன்மையுடன் வைத்துக் கொண்டு, இன்னொரு பகுதியை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவார்கள். எச்சில் பயன்படுத்த தடை விதிப்பு, பவுலர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் இந்த விவகாரம் குறித்து நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்கி வீசுவதை நான் எப்போதும் விரும்புவேன். ஒரு பவுலராக இயல்பாகவே பந்து மீது எச்சிலால் தேய்ப்பது நடந்து விடும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பந்து மீது எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம். இதேபோல் அதை கண்காணிப்பதும் சிரமம்தான்.

வியர்வையால் தேய்த்தால் பந்து கொஞ்சம் ஈரப்பதமாகி விடும் என்று நினைக்கிறேன். அதை சிறிதளவில் பயன்படுத்தினாலே போதும். ஏனெனில் வீரர்களின் கைகளிலேயே ஈரப்பதம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் பந்தை பிடிக்கும் போது சற்று ஈரம் ஒட்டிவிடும். வியர்வையால் பந்தை பளபளப்பாக்கும் உத்தியால் பெரிய அளவில் தாக்கம் இருக்கும் என்று நினைக்கவில்லை’ என்றார்.

‘நம்பர் ஒன்’ பவுலரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் கூறும் போது, ‘எச்சிலை உபயோகிக்க தடை விதித்தால், அதற்கு மாற்றாக வேறு வாய்ப்பு வழங்க வேண்டும். வியர்வை ஒன்றும் மோசமானது அல்ல. ஆனால் இதை விட இன்னும் சிறந்தது தேவைப்படுகிறது. பந்தை தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்க ஏதாவது செயற்கை பொருளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »