Press "Enter" to skip to content

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிப்பு

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஓபன் போட்டி டிசம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் அபாயத்தால் பேட்மிண்டன் போட்டிகள் 2 மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக மார்ச் 15-ந்தேதி ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் நடந்தது. அதன் பிறகு நடக்க இருந்த எல்லாவிதமான பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன.

இந்த நிலையில் மற்ற நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் ஆலோசித்து மாற்றி அமைக்கப்பட்ட புதிய போட்டி அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி ஐதராபாத் ஓபனோடு பேட்மிண்டன் தொடர் மீண்டும் ஆரம்பிக்கிறது. இந்த போட்டி ஆகஸ்டு 11-ந்தேதி முதல் 16-ந்தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த போட்டிக்கு பெரிய வீரர், வீராங்கனைகள் வருவதில்லை. ஆனால் கொரோனா பாதிப்பால் பேட்மிண்டன் தடைப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு நடக்கும் முதல் போட்டி என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும்.

இதே போல் மார்ச் மாதம் டெல்லியில் நடக்க இருந்த ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டிசம்பர் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகவும் அமைந்திருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. ரூ.1¼ கோடி பரிசுத்தொகைக்கான சயத் மோடி நினைவு சர்வதேச போட்டி லக்னோவில் நவம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இதே தேதியில் ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியும் அரங்கேறு கிறது. இந்தோனேஷிய ஓபனுக்கு தரவரிசை புள்ளியும், பரிசுத்தொகையும் அதிகம் என்பதால் சயத் மோடி கோப்பையை விட இந்தோனேஷிய தொடருக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த காலக்கட்டத்திற்குள் கொரோனாவின் தாக்கம் குறைந்து விடும் என்று நம்பப்படுகிறது. இல்லாவிட்டால் போட்டியை நடத்துவதில் சிக்கல் உருவாகும்.

டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ளும் உலக டூர் இறுதி சுற்று சீனாவின் குவாங்ஜோவில் டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மலேசிய ஓபன், கொரியா ஓபன், சீனா ஓபன், ஜப்பான் ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போன்ற முன்னணி போட்டிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதே சமயம் பிரபலம் இல்லாத குறைந்த தரவரிசை புள்ளிகள் வழங்கும் 10 தொடர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இடைநீக்கம் செய்யப்பட்ட ஜெர்மனி ஓபன், சுவிஸ் ஓபன், ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய போட்டிகளுக்கு ஏதுவான தேதி அமையாததால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் தாமஸ் லுன்ட் கூறுகையில், ‘பேட்மிண்டன் போட்டியை மீண்டும் தொடங்கும் திட்டத்தை வகுப்பது கடினமான பணி. இது ஒரு திணிக்கப்பட்ட போட்டி அட்டவணை தான். பாதுகாப்பான சூழலுடன், நடைமுறை சிக்கல்கள் தணியும் போது மறுபடியும் போட்டியை தொடங்குவதற்கு வசதியாக போட்டி அட்டவணையை வழங்கியிருப்பதாக நம்புகிறோம். அதே நேரத்தில் ஒவ்வொரு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை எப்போது தளர்த்தும் என்பதை கணிப்பது சிரமம். முழுமையான பாதுகாப்பு இல்லாதவரை போட்டியை நாம் மீண்டும் தொடங்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »