Press "Enter" to skip to content

கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் 14 நாட்கள் தனிமை – வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்ட ஐசிசி

கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

துபாய்:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. போட்டிகள், பயிற்சிகள் மீண்டும் நடக்கும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகளை அனைத்து விளையாட்டு அமைப்புகளும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஒரு தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளும் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்போது அவர்களிடம் உடல் வெப்ப நிலை பரிசோதனை, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு அணியிலும் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது உயிர் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.

அரசின் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், பயிற்சி மற்றும் போட்டியை மீண்டும் தொடங்குவதற்கான உயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு இவர் பொறுப்பாவார்.

பயிற்சியின்போது வீரர்கள் இடையில் ஓய்வுக்காக வெளியே செல்ல அனுமதி கிடையாது.

வீரர்கள் தங்களது தொப்பிகள், துண்டுகள், சன்கிளாஸ் உள்ளிட்ட பொருட்களை நடுவரிடமோ அல்லது சக வீரர்களிடமோ கொடுக்க அனுமதி இல்லை.

வீரர்கள் மற்றும் நடுவர்கள் கிரிக்கெட் களத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நடுவர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் பந்துகளை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று ஐ.சி.சி. குழு பரிந்துரை செய்து இருக்கிறது. அதே நேரத்தில் வியர்வைக்கு தடை இல்லை.

எச்சிலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பவுலர்களுக்கு மிகவும் சவாலானதாகும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »