Press "Enter" to skip to content

எங்களால் முடியவே முடியாது: வெளிப்படையாக கூறிய ஜேசன் ஹோல்டர்

பயோ-செக்யூர் வளையத்திற்குள் சிறிய அணிகளால் போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிய பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.

இந்தத் தொடர் மிகவும் எளிதாக நடந்துவிடவில்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பாதுகாப்பான இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதன்பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நெகட்டிவ் முடிவு வந்த பின்னர் அணி வீரர்கள் ஒன்றாக பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயோ-செக்யூர் வளையத்தை உருவாக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இந்த வளையத்தை விட்டு எக்காரணம் கொண்டும் வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் தனிமைப்படுத்திக் கொண்டு இரண்டு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி மிகவும் வசதியான போர்டு என்பதாலும், மான்செஸ்டர் போன்ற மைதானங்களில் அருகிலேயே ஓட்டல் அமைந்திருப்பதாலும் வசதியாக அமைந்தது. இதனால்தான் அயர்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுடன் அடுத்தடுத்து போட்டிகளை நடத்த இருக்கின்றன.

இந்நிலையில் எங்களை போன்று சிறிய கிரிக்கெட் போர்டுகளால் இதுபோன்று போட்டிகளை நடத்த முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘விரைவில் ஏதாவது அற்புதம் நடைபெறாவிட்டால், சிறிய நாடுகளில் குறைவான போட்டிகளை மட்டுமே பார்க்க முடியும். ஏனென்றால், அவர்களால் பயோ-செக்யூர் கொடுக்க முடியாது. நாங்கள் தற்போது நான்கு அல்லது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்ளை நடத்தி வருகிறோம். அது இரண்டு அல்லது மூன்றாக குறைந்துவிடும்.

வெஸ்ட் இண்டீசில் அதிகப்படியாக போட்டிகளை நடத்துவது மிகவும் கடினமானது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. இதை சந்தித்தாக வேண்டும். இது தொடர்பான அதிகாரிகள் உட்கார்ந்து பேசுவது அவசியம்.

கொரோனா தொற்றுக்கு முன்பு கூட ஐசிசி அளவிலான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளுக்குத்தான் வருமானம் அதிகமாக கிடைக்கும் அளவில் இருந்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து போன்ற அணிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடின. அந்த மூன்று நாடுகளுக்கு எதிராக போட்டிகளை நடத்துவதில் இருந்து வரும் வருமானம்தான எங்களை மிகப்பெரிய அளவில் சார்ந்திருந்தது.

நாங்கள் உண்மையிலேயே இங்கிலாந்திடம் இருந்து பணத்தை பெறுகிறோம். அதன்பிறகு இந்தியாவிடம் இருந்து என்று நினைக்கிறேன். பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஓரளவு பணம் கிடைக்கும். மற்றநாடுகளுடன் நடைபெறும்போது எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தற்போதைய நிலையில் போட்டியை நடத்த முயற்சிக்க முடியும்.

கிரிக்கெட் போட்டியை நடத்த சிறிய பிராந்தியங்கள் போராடி வருகின்றன. இந்த வருடத்திற்கு முன் இங்கிலாந்து கரீபியன் வந்தால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு நிதியளவில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டிற்கு இன்னும் இரண்டு காலம் மிகவும் கடினமானது. நாங்கள் மிகப்பெரிய அளவில் சம்பளம் பிடித்தத்தில் உள்ளோம். அதனால் 2020-க்கு முன் தொடர் நடைபெற வாய்ப்பிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »