Press "Enter" to skip to content

நாடு திரும்புவதைவிட ‘பயோ-பபுள்’ பாதுகாப்பானது என உணர்கிறேன்: ஆஸ்திரேலிய வீரர் சொல்கிறார்

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்று பேர் சொந்த நாடு திரும்பியுள்ளனர்.

ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. கடந்த 9-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியது. கடந்த 15 நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

இதனால் பெரும்பாலான நாடுகள் இந்தியா உடனான விமான போக்குவரத்தை துண்டித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் சொந்த நாட்டினருக்கே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் இந்தியாவிற்கு கடும் சோதனைக் காலம் எனத் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளையத்திற்குள் வந்து விட்டால் தொடர் முடியும் வரை வெளியேற முடியாது. மைதானத்தில் இருந்து ஓட்டல், ஓட்டலில் இருந்து மைதானம் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி.

வீரர்களை சந்திக்க நேரிடும் அனைவரும் பயோ-பபுள் வளையத்திற்குள் வந்துவிடுவார்கள். அதேசமயம் சுதந்திரம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது கடினமானதாகும். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை தொடர்ந்து பயோ-பவுள் வளையத்திற்குள் இருக்க முடியாது எனக் கூறி தொடரில் இருந்து விலகினார்.

இந்திய வீரர் அஷ்வின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரை கவனிக்க வேண்டும் என ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். சொந்த காரணத்திற்கான சொந்த நாடு திரும்புகிறோம் என்றாலும், இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு, ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கும் நாதன் கவுல்டர்-நைல், இந்த தருணத்தில் சொந்த நாடு திரும்புவதை விட பயோ-பபுள் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாதன் கவுல்டர்-நைல் கூறுகையில் ‘‘ஆண்ட்ரூ டை, ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் சொந்த நாடு திரும்புவதை பார்க்க ஆச்சர்யமாக உள்ளது. ஆனால், அவர்களிடம் நீங்கள் பேசினால், அவர்கள் ஏன் திரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். ஆடம் ஜம்பாவிடம் பேசும்போது, நாடு திரும்புவதற்கான தகுந்த காரணத்தை தெரிவித்தார். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த நேரத்தில் சொந்த நாடு திரும்புவதை விட பயோ-பபுள் சிறந்தது என உணர்கிறேன்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »