Press "Enter" to skip to content

ஊக்க மருந்து சோதனையில் இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் தோல்வி- ஒலிம்பிக் வாய்ப்பு மங்கியது

சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும் என்றும் தற்போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறினார்.

புதுடெல்லி:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு அவர்களின் உடல்தகுதி உறுதி செய்யப்படுகிறது.

அவ்வகையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக்கிற்கு (125 கிலோ எடைப்பிரிவு) நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில்  தோல்வி அடைந்துள்ளார். எனவே, அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியுடன் இணையமாட்டார் என தெரிகிறது. 

சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தது இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

இதுபற்றி இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ஊக்கமருந்து சோதனையில் சுமித் தோல்வி அடைந்ததால் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு மங்கிவிட்டது. சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும். இப்போதைக்கு அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். அடுத்தகட்ட சோதனைக்குப் பிறகு, விசாரணை செய்து முடிவு அறிவிக்கப்படும். 

சுமித் காயமடைந்ததால் சில மருந்துகளை பயன்படுத்தியிருக்கலாம். பி மாதிரி சோதனையிலும் பாசிட்டிவ் என வந்தால் அவர் தடை செய்யப்படலாம்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »