Press "Enter" to skip to content

இந்தியா-இங்கிலாந்து சோதனை போட்டியை ரத்து செய்தது அவமானம்… ஷேன் வார்ன் ட்வீட்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான கடைசி சோதனை போட்டி ரத்து செய்யப்பட்டதையடுத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

லண்டன்:

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி சோதனை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-1 என்ற முன்னிலையில் இருந்த இந்திய அணி, கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்க தயாராக இருந்தது. ஆனால்,  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து போட்டியை ரத்து செய்திருப்பதாக தெரிகிறது. இந்த போட்டியை பின்னர் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்துகிறது. 

இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றிய நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இந்திய அணியினர் யாரும் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அதேசமயம் கொரோனா பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்தது. எனினும், 5-வது சோதனை போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டதால் அணி வீரர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை சமூக வலைத்தளங்கள் வாயிலாக கொட்டித் தீர்த்தனர்.

இது ஒரு அற்புதமான தொடர் என்றும், போட்டியை ரத்து செய்திருப்பது அவமானம் என்றும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போட்டி ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறி உள்ளார். மேலும், பிரிட்டனில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் பருவம் தொடங்கும் போது, தொடக்க ஆட்டத்தை பாதிக்குமா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியா மீது குற்றம் சாட்டினார். இது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »