Press "Enter" to skip to content

இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற வாய்ப்பு – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்கிறார்

எம்எஸ் டோனி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரின் மட்டையாட்டம் திறனை இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி.

2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை டோனி பெற்றுக்கொடுத்தார். அதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

மேலும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை 2013-ம் ஆண்டு அவரது தலைமையிலான அணி வென்றது. 2 உலககோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக்கொடுத்த டோனி கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2019-ம்ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரைஇறுதிப் போட்டி அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.

40 வயதான டோனி ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 3 முறை (2010, 2011, 2018) ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

கடந்த முறை பிளேஆப் சுற்றுக்கு நுழையாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐ.பி.எல். போட்டியில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குள் கிட்டத்தட்ட நுழைந்து விட்டது.

இந்தநிலையில் இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற்று விடுவார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட்ஹாக் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-

சி.எஸ்.கே. கேப்டன் டோனிக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல். பருவம்தான் கேப்டனாகவும், வீரராகவும் கடைசி சீசனாக இருக்கும் என நான் நம்புகிறேன். டோனி தனது மட்டையாட்டம் திறனை இழந்து விட்டார். இந்த காரணத்தினால்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அவர் ஒதுங்கி விடலாம்.

டோனி மட்டையாட்டம் செய்யும் விதத்துக்கும், கால் நகர்த்தும் விதத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரது மட்டையாட்டம் திறனை இழந்து விட்டதாகவே கருதுகிறேன். 40 வயதான டோனிக்கு தளர்வு வந்து விட்டது. எனவே இந்த ஆண்டு பருவம் முடிந்த பிறகு டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்கலாம்.

2022-ம் ஆண்டு சீசனுக்கு மெகா ஏலம் நடக்க உள்ளது. இதில் டோனி இல்லாவிட்டால் சி.எஸ்.கே. அணிக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும். அதன்பின் டோனியை வேறு பணிகளில் சி.எஸ்.கே. அணி பயன்படுத்தும்.

20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்கு ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டது வரவேற்கதக்கது. டோனிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பதவி சி.எஸ்.கே. அணியில் அவர் நிர்வாக ரீதியிலான பதவிக்கு கொண்டு வர வழிவகுக்கும். மேலும் தலைமை பயிற்சியாளராக கூட ஆகலாம்.

இந்திய கிரிக்கெட் மற்றும் சி.எஸ்.கே. அணியின் வளர்ச்சிக்கு டோனியின் தலைமை பண்பு மிகவும் நல்லது. ஜடேஜா அணியில் வளர்வதற்கும், இளம் வீரர்களை மேம்படுத்துவதற்கும் டோனி உதவி செய்கிறார்.

இவ்வாறு பிராட்ஹாக் கூறி உள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »