Press "Enter" to skip to content

சென்னை காற்று மாசுபாடு அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பிரமிளா கிருஷ்ணன்
பிபிசி தமிழ்

டெல்லியை உலுக்கிய காற்று மாசுபாடு தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பேசுபொருளாகியுள்ளது. சென்னை நகரத்தில் ஒரு சில இடங்களில் புகைமூட்டம் போல தென்பட்ட காற்றுமாசுபாடு பற்றிய படங்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து, சென்னை நகரத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும், காற்று வீசும் திசையில் மாறுபாடுகள் இருப்பதால், ஆங்காங்கே மாசுபாடு புகைமூட்டமாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தபோதும், டெல்லியில் உள்ள மாசுபாடு நிலை, சில ஆண்டுகளில் சென்னை நகரத்திற்கும் ஏற்படுமா என சென்னைவாசிகள் பலரையும் யோசிக்கவைத்துள்ளது.

சென்னையில் உள்ள காற்றுமாசுபாடு பற்றி எந்த புகாரும் வராததால், இதுவரை மழைக்காலத்தில் ஏற்பட்டுள்ள மாசுபாடு குறித்து தனிப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த உயரதிகாரி ஒருவர், சென்னையில் காற்றுமாசுபாட்டை கண்காணிக்க புதிதாக எந்த கருவியும் பொருத்தப்படவில்லை என தெரிவித்தார். அதேபோல வானிலை ஆய்வு மையத்தில் காற்று மாசுபாட்டை கண்காணிக்க சிறப்பு கருவிகள் இல்லாததால், மாசுபாடு குறித்து விளக்கம் தரமுடியாது என வானிலை ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்தனர்.

சென்னையில் காற்று மாசுபாடு முறையாக கண்காணிக்கப்படவில்லையா, காற்று மாசுபாடு எந்த அளவில் உள்ளது, சென்னை நகரத்தில் மாசுபாடு உள்ள ஆபத்தான இடங்கள் எவை என பல கேள்விகள் எழுகின்றன.

சுத்தமான காற்றுக்கான மருத்துவர்கள் அமைப்பை (Doctors for clean air) சேர்ந்தவர் மருத்துவர் ஜி.சந்திரசேகர். கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் காற்று மாசுபாடு பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்து, இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார். சந்திரசேகரிடம் விளக்கம் பெற்றோம்.

”அண்டை மாநிலங்களில் விவசாய நிலங்களில் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. சென்னையில் உள்ள பிரச்னையை டெல்லியில் உள்ள பிரச்னையோடு ஒப்பிட்டு பார்க்கமுடியாது. சென்னை நகரத்தில் புதிய கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடு, பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டுமானம், ஒவ்வோர் ஆண்டும் இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவருவது போன்ற காரணங்களால் சென்னையில் சமீப காலங்களில் மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு டெல்லியில் உள்ள மாசுபாடு விவாதத்திற்கு உள்ளாகிவிட்டதால், சென்னை நகரவாசிகளும் கவனிக்க தொடங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது,”என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

சென்னையில் கடல் இருப்பதால், காற்று மாசுபாட்டை முழுவதுமாக கடல் உள்வாங்கிக்கொள்ளும் என்ற தவறான கருத்து நிலவுகிறது என்று கூறும் சந்திரசேகர், ”நுண்துகள்களாக காற்றில் பறக்கும் தூசுகளை பலரும் சுவாசிக்கிறோம் என்பதை உணரவேண்டும். டெல்லியில் இன்று உள்ள நிலையைவிட நாம் நன்றாக இருக்கிறோம் என்பதை விட, தற்போது மாசு கட்டுப்பாட்டை செய்யாவிட்டால், நமக்கு வேறு ரூபத்தில் காற்று மாசுபாட்டால் பிரச்சனை ஏற்படும் என்பதற்கு அதிகரித்துவரும் நோயாளிகள் சான்று,”என்கிறார் அவர்.

”சென்னையில் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள இடங்களில் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமான அளவு மாசுபாடு இருப்பதை கண்டறிந்தோம். காற்றில் மாசுதுகள்களின் அளவு 50க்கும் குறைவாக இருக்கவேண்டும். 60க்கும் மேலாக சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் உள்ளது என்பதை கண்டுபிடித்தபின்னர், மருத்துவ முகாம்களை நடத்தினோம். எண்ணூர், மணலி போன்ற இடங்களில் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தோம். எண்ணூர்,மீஞ்சூர், குருவிமேடு ஆகிய பகுதிகளில் மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு ஆளாகியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது காற்றுமாசுபாடு பல நாட்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதை கண்டறிந்தோம்,”என்கிறார் சந்திரசேகர்.

மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிட்டது போன்ற மூச்சுதிணறல் சிரமத்தை தனது தாயார் சந்தித்துவருவதாக கூறுகிறார் எண்ணூரில் வாழும் மேகலா. ”என் தாயாருக்கு 70 வயதாகிறது. இதுவரை உடல்நல குறைவு பிரச்சனைகள் பெரிதாக இருந்ததில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக மூச்சுவிடுவதற்கு சிரமமாக இருப்பதாக அடிக்கடி சொல்லுவார். மருத்துவரிடம் சிகிச்சைக்கு கூட்டிச்செல்வோம். மூச்சுத்திணறல் ஏற்பட காற்று மாசுபாடு ஒரு முக்கிய காரணம் என குடும்ப மருத்துவர் சொல்கிறார். நாங்கள் வேறு இடத்திற்கு குடியேறுவது தற்போது முடியாது என்பதால் இங்கேயே வசிக்கிறோம். வெளியில் நடமாடுவதை என் அம்மா தற்போது வெகுவாக குறைத்துக்கொண்டார்,”என்கிறார் மேகலா.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகளால் நிக்கல், பாஸ்பரஸ், மக்னீசியம், லெட் உள்ளிட்ட ரசாயனம் மற்றும் உலோக கழிவு துகள்கள் சென்னையில் உள்ள காற்றில் தென்படுவதாக கூறுகிறார் சுற்றுசூழல் ஆர்வலர் ஸ்வேதா. மருத்துவர் சந்திரசேகர் மற்றும் ஸ்வேதா தன்னார்வலர்களாக காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

”சென்னையில் வடசென்னையில்தான் காற்று மாசுபாடு அதிகம் உள்ளது என நினைக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக காற்று மாதிரிகளை சோதனை செய்ததில் சென்னையில் எண்ணூர், மணலி போன்ற தொழிற்சாலை உள்ள பகுதிகளில் உள்ள காற்று மாசுபாட்டில் உள்ள துகள்கள், அடையாறு, போட்கிளப்தொலைபேசிற இடங்களிலும் தென்பட்டன. காற்றின் திசைதான் இதற்கு காரணம். எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும், காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்கமுடியாது,’என்றார் ஸ்வேதா. மேலும், குப்பை கிடங்கு பகுதிகளான கொடுங்கையூரில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு பிரச்சனைகள் ஏற்பட காற்று மாசுபாடு காரணம் என்பதை எந்த சோதனையும் செய்யாமல் நேரில் சென்று பார்த்தாலே புரியும் என்கிறார்.

சென்னையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக நிறுவப்பட்டுள்ள நான்கு கருவிகள் காற்று மாசுப்பாட்டை கண்காணிக்கின்றன என்றும், தமிழக அரசின் சார்பாக உடனடியாக மாசுபாட்டை அறிந்துகொள்ளும் கருவிகள் நிறுவப்படவில்லை என்கிறார் அவர்.

”தமிழக அரசு நிறுவியுள்ள எட்டு கருவிகள் ஒரு வாரம் கழித்து மாசு அளவுகளை தரும். இந்த அளவுகளை தெரிந்துகொள்வதால் எந்த பயனும் நமக்கு இல்லை. உடனடியாக மாசு அளவை தெரிந்துகொள்ள சென்னை போன்ற நகரத்திற்கு குறைந்தபட்சம் 60 கருவிகள் தேவை. சென்னை நகரம் விரிவடைந்து வருகிறது என்பதால் முக்கிய இடங்களில் இந்த கருவிகளை நிறுவினால்தான் நம் நகரத்தில் என்ன பிரச்சனை, எதனை சரிசெய்யவேண்டும் என தெரியும். பிரச்சனையின் ஆழம் தெரியாமல், நம் ஊரில் பிரச்சனை இல்லை என சொல்லமுடியாது,”என்கிறார் ஸ்வேதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from இந்தியாMore posts in இந்தியா »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.