மேட்டுப்பாளையம் விபத்து: 10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர், உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சுவர் இடிந்து விழுந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மேலும் தலா ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ” என்றார்.

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறினார்.

17 பேர் இறந்தது வேதனையளிக்கிறது என்று கூறிய பழனிசாமி, சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டிப்பதையும் சுட்டுக்காட்டினார்.

தீண்டாமை சுவர் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, “சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

அவர், “புகார் அளித்த போது பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் பட்டியல் உள்ளது. அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் கைது

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்துக்கு காரணமான சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் என்பவரை கோவை மாவட்ட காவல்துறையால் நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்தனர்.

‘தீண்டாமை சுவர்’

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதனை `தீண்டாமைச் சுவர்` என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இது அந்த வட்டாரத்தில் `தீண்டாமைச் சுவர்` என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அதிகாலையில் பெய்த அடைமழை (கனமழை) காரணமாக அந்தச் சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது.” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com