தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வங்கி என்ன?

தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வங்கி என்ன?

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களை ஒதுக்கவில்லையென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை விட்டதையடுத்து, இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் எதிரும் புதிருமாகப் பேசிவருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் வாக்கு வங்கியே கிடையாது என்கிறது தி.மு.க தரப்பு. அது எந்த அளவுக்கு உண்மை?

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் போதுமான இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லையென கூறி, மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியும் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியிட்டனர்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் மாவட்ட அளவில் பேசி இடங்களைப் பெற்றுக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் அந்த முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லையெனவும் இது கூட்டணி தர்மத்திற்கு முரணானது, புறம்பானது என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்த நிலையில் பொங்கல் தினத்தன்று, வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், காங்கிரசிற்கென்று பெரிதாக வாக்குவங்கி ஏதும் இல்லை என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். “துரைமுருகன் அவர்களின் காங்கிரஸ் பற்றிய பேச்சு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றும் தெரிவித்திருந்தார். விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூரும் துரைமுருகனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், இந்த மோதல் தமிழக அரசியல் களத்தில் வெகுவாகக் கவனிக்கப்படுகிறது.

உண்மையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி என்பது என்ன? கடந்த சில ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இரண்டு முறையே தனித்துப் போட்டியிட்டிருக்கிறது. முதலாவதாக 2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்; இரண்டாவதாக, 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்.

2011ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே தேர்தலை சந்தித்திருந்தன. ஆனால், பெரும் தோல்வியைச் சந்தித்தன. 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் ஐந்து இடங்களையே பிடித்தது. வாக்கு சதவீதம் 9.3ஆக இருந்தது.

இதற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. அப்போது நகராட்சி வார்டு பகுதிகளில் 4.46 சதவீத வாக்குகளையும் பேரூராட்சிப் பகுதிகளில் 4.65 சதவீத வாக்குகளையும் பெற்றது. ஒட்டுமொத்தமாக சுமார் 750 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால், இந்த முறை 15 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ், தனித்துப் போட்டியிட்டபோது 5 இடங்களையே பிடித்திருந்து. இந்த முறை 132 ஊராட்சி ஒன்றிய வார்டு இடங்களை வென்ற காங்கிரஸ், 2011ல் 158 இடங்களைக் கைப்பற்றியது.

நரேந்திர மோதி அலை வீசிய 2014 தேர்தல்

2013ஆம் ஆண்டே, காங்கிரஸ் கூட்டணியைவிட்டு தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி 39 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது. நரேந்திர மோதி அலை வீசிய அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து இடங்களையும் கைப்பற்ற, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை.

39 தொகுதிகளிலும் சேர்த்து, 17 லட்சத்து 51 வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 4.3 சதவீதம். கிட்டத்தட்ட உள்ளூராட்சித் தேர்தல்களில் அக்கட்சி பெற்ற சதவீதத்திற்கு நிகராகவே இந்தத் தேர்தலிலும் வாக்குகள் காங்கிரசிற்குக் கிடைத்தன.

அந்தத் தேர்தலில் 35 தொகுதிகளில் 40 முதல் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர். வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே 40 சதவீதத்திற்குக் குறைவான வாக்குகளுடன் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர்.

ஆகவே, 2014ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தாலும்கூட, அந்தக் கூட்டணி கைப்பற்றியிருக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கும்.

“இதில் முக்கியமான பிரச்சனையே கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு சதவீதத்தை வெல்கின்றன என்பதுதான். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 176 இடங்களில் போட்டியிட்டு, 89 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களையே கைப்பற்றியது. அதுவும் அ.தி.மு.கவுடன் அக்கட்சி நேரடியாக மோதினால், வெற்றி வாய்ப்பு காங்கிரசிற்கு மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. ஆகவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 40 இடங்களையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள் என்றுதான் சொல்லப் பார்க்கிறது தி.மு.க. அதுதான் பிரச்சனையின் அடிப்படை” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான தராசு ஷ்யாம்.

கூட்டணியில் காங்கிரசிற்கு அதிக இடங்களைக் கொடுத்தால், பெரும் இழப்பு ஏற்படுவதாக தி.மு.க. கருதுகிறது என்கிறார் அவர்.

காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி முறியும்பட்சத்தில் இரு கட்சிகளுக்கும் இருக்கும் வாய்ப்புகள் என்ன? “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து கூட்டணியை அமைக்கலாம். ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரையும் இணைத்துக்கொள்ளலாம். தி.மு.கவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் இல்லாவிட்டால் பா.ம.கவுடன் இணையப் பார்ப்பார்கள். அப்படி நடந்தால், தி.மு.கவுக்கு பெரும் வெற்றி கிடைத்துவிடும்,” என்கிறார் ஷ்யாம்.

காங்கிரஸ் – தி.மு.க. மோதல் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
kathiravan