கோவை தொழில் துறை வரவு செலவுத் திட்டம் மூலம் ஜி.எஸ்.டி வரியின் பாதிப்பிலிருந்து மீளுமா?

கோவை தொழில் துறை வரவு செலவுத் திட்டம் மூலம் ஜி.எஸ்.டி வரியின் பாதிப்பிலிருந்து மீளுமா?

மு. ஹரிஹரன்
பிபிசி தமிழுக்காக

தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழகத்தின் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

பெரும் உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரித்து ஒப்படைக்கும் பணியை நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்குப் பின்னர் கோவையைச் சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

”ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எனது தொழிற்கூடத்தின் அனைத்து இயந்திரங்களும் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டே இருக்கும். உற்பத்தி ஆர்டர்கள் குவிந்துகிடக்கும். சுமார் 30 தொழிலாளிகள் வேலை செய்துவந்தனர். ஆனால், இன்றைக்கு அதிகபட்சம் 8 மணி நேரம் மட்டுமே இயந்திரங்கள் இயக்கப்படுகிறது. வெறும் 5 பணியாளர்கள்தான் வேலை செய்கின்றனர். பெருநிறுவனங்களிலிருந்து ஆர்டர்களும் வருவதில்லை. இயங்காமல் கிடக்கும் இயந்திரங்களை வாங்குவதற்கும் ஆளில்லை. சுமார் 80 சதவிகித சிறு குறு நிறுவனங்கள் வருவாய் இல்லாமல் மூடப்படும் நிலையில் உள்ளன. இதுதான் கோவையில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் இன்றைய நிலை,” என்கிறார் கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்.

ஜாப் ஆர்டர்களுக்கு (Job order or Job work) விதிக்கப்படும் அதிக வரிவிதிப்புதான் தொழிற்கூடங்கள் முடங்கிக் கிடப்பதற்குக் காரணம் என்கிறார் இவர்.

”பெருநிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வடிவில் மூலப் பொருட்களையோ அல்லது உதிரிப் பாகங்களையோ தயாரித்துக் கொடுக்க சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்களை வழங்குவார்கள். அவைதான் தொழிலாளர்களுக்கும் உரிமையாளருக்கும் போதுமான வருவாயை உருவாக்கித் தருகின்றன. இதற்கு, ஆங்கிலேயர் காலத்தில் கூட வரி விதித்ததில்லை. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் ஜாப் ஆர்டர்களுக்கும் 18 சதவிகித வரியை அமல்படுத்தியது உற்பத்தியைப் பாதித்ததோடு, இந்த தொழிலைச் சார்ந்திருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் வேலை இழக்கச் செய்துள்ளது’ எனத் தெரிவித்தார் மணிராஜ்.

”15 மணி நேரம் வேலைசெய்து வந்த காலம் மாறி இன்று வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் என வெறும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறேன். இதனால், எனது வருமானம் பாதியாகியுள்ளது. வேறு வேலை தெரியாததால் என்னைப் போலவே பல தொழிலாளர்களும் செய்வதறியாமல் தவித்து வருகிறோம். விலைவாசி உயர்வு ஒருபுறம், வருவாய் இழப்பு மற்றொரு புறம் என வாழ்வாதாரத்தை இழந்து கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம்’ என்கிறார் தொழிலாளி சண்முகம்.

சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் இந்த நிலைக்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஒரு காரணம் என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ்.

”பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்த ஆறு மாதங்கள் பணப்புழக்கம் இல்லாததால், மூலப்பொருட்கள் வாங்குவதிலும், தொழிலாளிகளுக்குச் சம்பளம் வழங்குவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதிலிருந்து மீள்வதற்குள் ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து மொத்த உற்பத்தியையும் முடக்கிப்போட்டது. ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் மூலப்பொருட்களின் விலை குறையும் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்று வரை மூலப்பொருட்களின் விலை குறையவில்லை. ஜாப் ஆர்டர்களுக்கான தொகை சுமார் 3 மாதங்களுக்குப் பின்தான் எங்கள் கைகளில் கிடைக்கும், அதற்கு 18 சதவிகித வரியையும் சேர்த்துச் செலுத்துகிறோம். இந்த கால இடைவேளை பொருளாதார அடிப்படையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஜி.எஸ்.டி தாமதமாகக் கட்டினால் அபராதம் விதிக்கப்படுகிறது.”

”இந்த நிலையில் தொழிற்கடன், தொழிலாளர் சம்பளம், தொழிற்கூட செலவுகள், ஆடிட்டர் கட்டணம் என நெருக்கடிகள் அதிகமாகியுள்ளன. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு சில உற்பத்தி பொருட்களுக்கு 12 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜாப் ஆர்டர்களுக்கான வரியை ரத்து செய்வது தான் இந்த தொழிலை மீட்பதற்கான ஒரே வழி, இல்லையெனில் ‘தொழில் நகரம்’ என்ற அடையாளத்தையே கோவை மாவட்டம் இழந்துவிடும். எனவே, வரும் பட்ஜெட்டிில் நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான ஜாப் ஆர்டர் வரியை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு தந்து, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்,” எனக் கோரிக்கை வைக்கிறார் ஜேம்ஸ்.

மேலும், தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மின் கட்டண உயர்வு, மூலப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவையும் சிறு குறுந்தொழில் நிறுவனங்களைப் பாதிப்புக்குள்ளாக்குவதால், வரும் பட்ஜெட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற வேண்டும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan