அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.)

“இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் இந்தக் கட்டுரையை எழுதினார். அதன்பிறகு நிறைய மாறிவிட்டது என்றாலும், அதிகமாக மாறிவிடவில்லை.

பீ.ஆர்.அம்பேத்கர் தனது முதல் இதழியல் கட்டுரையை எழுதி இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன.

இதழியல் துறையுடன் அம்பேத்கரின் தொடர்பு அவருடைய வாழ்வில் இணைந்தே வந்துள்ளது. இதழியல் முயற்சிகளை அவர் தொடங்கி, இதழின் ஆசிரியராக இருந்து, ஆலோசனைகள் அளித்து, நடத்தவும் செய்துள்ளார். மற்ற சமயங்களில் அவரைப் பற்றி ஊடகங்கள் செய்தி எழுதிக் கொண்டிருந்திருக்கும். தான் வாழ்ந்த காலக்கட்டத்தில், மக்களை அணுகுவதில் அதிகமாகப் பயணம் செய்த அரசியல்வாதியாக அவர் இருந்தார்.

ஏறத்தாழ தனிநபராகவே சமூக இயக்க முன்முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது என்ற வகையில் அவருக்கு அது தேவைப்பட்டது. காங்கிரஸ் கட்சியைப் போன்ற சமூக ஆதரவு அல்லது பொருளாதாரப் பின்னணி எதுவும் இல்லாத நிலையில், ஏழை மக்களுக்கான இயக்கமாக அம்பேத்கரின் இயக்கம் இருந்தது. எனவே அவருடைய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் நிலத்தில் அடிமை போல வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது முதலாளிகளுக்கு அடிமைகளாகவோ இருந்து உரிமைகளைப் பறிகொடுத்த மக்களாகவோதான் இருந்தார்கள்.

பொருளாதார ரீதியில் தாழ்மையான நிலையில் இருந்தவர்கள் அவர்கள். எனவே வெளியில் இருந்து பெரிய ஆதரவு எதுவும் இல்லாமல், மேலிருந்து கீழ்நிலை வரை அனைத்தையுமே அம்பேத்கர் தன் தோள்களில்தான் சுமக்க வேண்டியிருந்தது. இது ஊடகத்தினரின் பார்வையில் கவனிப்புக்கு உரியதாக இருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் அம்பேத்கரின் பணிகள் பற்றி எழுதப்பட்டன. உள்நாட்டு ஊடகங்களில் அவருடைய இருப்பு மற்றும் இதழியல் பணிகளை நாம் அறிந்துள்ளோம் என்றாலும், சர்வதேச ஊடகங்களில் அவருக்குக் கிடைத்த பரவலான பிரபலம் பெரும்பாலும் தெரியாத விஷயமாகவே உள்ளது.

லண்டனில் தி டைம்ஸ், ஆஸ்திரேலியாவில் டெய்லி மெர்க்குரி, இவை தவிர நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் ஆம்ஸ்டர்டாம் நியூஸ், மற்றும் பால்டிமோர் ஆஃப்ரோ அமெரிக்கன், தி நோர்போல்க் ஜர்னல் போன்ற கறுப்பினத்தவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகள் அம்பேத்கரின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்திலும், காந்திக்கு எதிரான மோதல்களிலும் அதிக ஆர்வம் காட்டின. அரசியல்சாசனத்தை உருவாக்கியதில் அம்பேத்கரின் பங்களிப்பு, நாடாளுமன்றத்தில் அவர் பங்கேற்ற விவாதங்கள் மற்றும் உரைகள், நேரு அரசில் இருந்து விலகியது ஆகியவற்றை உலகம் முழுக்க ஊடகங்கள் கூர்ந்து கவனித்தன. “கறுப்பு அமெரிக்காவில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் நான் எழுதி வரும் புத்தகத்தில், பழைய சர்வதேச பத்திரிகைகளில் அம்பேத்கரின் மகத்தான ஆளுமை குறித்த ஏராளமான தகவல்களை நான் கண்டறிந்து பதிவு செய்திருக்கிறேன்.

உள்நாட்டில் தன்னுடைய சமூக நல இயக்கத்தின் கருத்துகளை ஊடகங்கள் மூலம் அவர் பரப்பினார். மராத்தி மொழியில் “மூக்நாயக்” என்ற முதலாவது இதழை அவர் தொடங்கினார். பிராந்திய உணர்வுகளை மேன்மைப்படுத்தும் நோக்கில் அந்த இதழை அவர் தொடங்கினார். மூக்நாயக் இதழுக்கு வழிகாட்டியாக துக்காராமின் கவிதைகள் அமைந்திருந்தன.

இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்கள் என கூறப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராட அந்த இதழை அம்பேத்கர் பயன்படுத்தினார். முதல் 12 இதழ்களுக்கு அவரே ஆசிரியராக இருந்தார். அடுத்து அதன் பொறுப்பை பாண்டுரங்க பாட்கரிடம் ஒப்படைத்தார். அதையடுத்து டி.டி. கோலப் அந்தப் பொறுப்பை ஏற்றார். மேற்படிப்புக்காக அம்பேத்கர் வெளிநாடு சென்றுவிட்டதாலும், விளம்பர வருவாய் இல்லாதது மற்றும் சந்தாதாரர் ஆதரவு இல்லாததாலும், இதழை நடத்த முடியாமல் போனதால் 1923ல் அது மூடப்பட்டது.

ஆரம்ப காலத்தில் ராஜிஸ்ரீ சாகு மகராஜ் இந்த இதழுக்கு ஆதரவு அளித்தார். “மூக்நாயக்கின் தொடக்கம் தீண்டத்தகாதவர்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் என கூறப்பட்டவர்களுக்குப் புதிய விடியலை அது ஏற்படுத்தியது” என்று அம்பேத்கர் இதழியலின் அறிஞரான கங்காதர் பன்டவனே கூறியுள்ளார். (G Pantawane, Patrakar Dr Babasaheb Ambedkar, பக்கம் 72 )

மூக்நாயக்கிற்குப் பிறகு “பகிஷ்கருக் பாரத்” (நிராகரிக்கப்பட்டவர்களின் இந்தியா) என்ற இன்னொரு இதழை 1927 ஏப்ரல் 3ல் அம்பேத்கர் தொடங்கினார். மகாராஷ்டிராவில் மகத் என்ற இடத்தில் (இப்போது ராய்கட் மாவட்டத்தில் உள்ளது) பொது குளத்தை தீண்டத்தகாதவர்களும் பயன்படுத்த அனுமதிக்கக் கோரும் போராட்டம் சூடுபிடித்த நிலையில் இந்த இதழை அவர் தொடங்கினார். அந்த இதல் 1929 நவம்பர் 15 ஆம் தேதி வரை வெளியானது. அந்த காலக்கட்டத்தில் 43 இதழ்கள் வெளியாயின. இருந்தபோதிலும் நிதிச் சிக்கல்களால் அந்த சூழ்நிலை ஏற்பட்டது.

மூக்நாயக் மற்றும் பகிஷ்கருக் பாரத் இதழ்களின் விற்பனை விலை மிகக் குறைவாக ஒன்றரை அணா மட்டுமே இருந்தது. தபால் செலவுடன் சேர்த்து வருடாந்திர சந்தா வெறும் 3 ரூபாய் என்று மட்டுமே இருந்தது (பன்ட்வானே, பக்கம் 76) அந்த சமயத்தில் சமதா இதழ் 1928ல் ஆரம்பிக்கப்பட்டது. அது பகிஷ்கருக் இதழுக்கு புத்துயிர் கிடைத்தது, “ஜனதா” – என்ற புதிய பெயரும் கிடைத்தது. இது 1930 நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தலித்துகளுக்கான பத்திரிகையாக நீண்டகாலமாக இது வெளியானது. இந்தப் பத்திரிகை 25 ஆண்டுகள் வெளியானது. இந்தப் பத்திரிகை பின்னர் “பிரபுத்தா பாரத்” (தெளிவு பெற்ற இந்தியா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அம்பேத்கரின் புதிய இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப 1956ல் இந்த மாற்றம் செய்யப்பட்டு 1961 வரை நடந்தது. எனவே, பகிஷ்கருக் இதழ் 33 ஆண்டுகளாக வெளியானது, தலித்துகளுக்கான சுதந்திரமாக நீண்டகாலம் வெளியான இதழாக அதைக் கருதிக் கொள்ளலாம்.

இந்த காலக்கட்டங்களில் அம்பேத்கர் புத்திசாலித்தனமாக இருந்தார். தனது இதழ்களில் சாதி இந்துக்களை சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் எடிட்டர்களை பயன்படுத்திக் கொண்டார். அவர் தொடங்கிய பல செய்தி வெளியீடுகள் பிராமண எடிட்டர்களால் எடிட் செய்யப்பட்டன, நிர்வகிக்கப்பட்டன.

டி.வி. நாயக் (சமதா மற்றும் பிராஹ்மன் பிராஹ்மனேட்டர் எடிட் செய்தவர்), பி.ஆர். கட்ரேகர் (ஜனதா), ஜி.என். சகஸ்ரபுத்தே (பகிஷ்க்ருட் பாரத் மற்றும் ஜனதா) ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். பி.சி. காம்ப்ளே, யஸ்வந்த் அம்பேத்கர் போன்ற தலித் எடிட்டர்கள் ஜனதாவில் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்கு வகித்தனர். இருந்தபோதிலும், “பகிஷ்க்ருட் பாரத்” -ல் எழுத போதிய எழுத்தாளர்கள் இல்லை. அதனால் 24-24 காலங்களையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு இதழின் ஆசிரியருக்கே இருந்தது. யஸ்வந்த் அம்பேத்கர், முகுந்த்ராவ் அம்பேத்கர், டி.பி. ருப்வதே ஷங்கர்ராவ் காரத், பி.ஆர். கட்ரேகர் ஆகியோர் தாங்கள் வாழ்ந்த காலம் வரையில் “பிரபுத்தா பாரத்”-ஐ தயாரித்து அளித்தனர்.

தலித் இதழியல்

அம்பேத்கருக்கு முந்தைய காலத்தில் தீண்டத்தகாதவர்களின் செயல்பாடுகள் பற்றி சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. உதாரணமாக ஃபூலே தொடங்கிய சத்யிஸ்சோதக் இயக்கம் இதுபோன்ற இதழியல் செயல்பாடுகளுக்கு உத்வேகமாக அமைந்தது.

ஒடுக்கபட்ட மக்களுக்கான இந்தியாவின் முதலாவது பத்திரிகையான “தீனபந்து” 1877 ஜனவரி 1ஆம் தேதி கிருஷ்ணராவ் பாலேகரால் தொடங்கப்பட்டது. சத்யிஸ்சோதக் சிந்தனைகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பத்திரிகை உருவானது. தலித்துகள் மற்றும் அவர்களுடைய கருத்துகளுக்கு அதில் இடம் அளிக்கப்பட்டது. சிறு சிறு தடங்கல்கள் இருந்தாலும் அந்தப் பத்திரிகை 100 ஆண்டுகளுக்கும் மேல் வெளியானது.

மகாராஷ்டிராவில் அதிகம் உள்ள மகர் என்ற தலித் மக்களின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கோபால் பாபா வாலங்கர், முதலாவது தலித் இதழாளராக இருந்தார். தீண்டாமை குறித்து “தீன்மித்ரா”, “தீனபந்து” மற்றும் “சுதாரக்” இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் திருப்புமுனைகளை ஏற்படுத்தின (பார்க்கவும் – பன்டவானே).

வாலங்கர் முன்னுதாரணமான அறிஞராக இருந்தார். இந்து சமய நடைமுறை குறித்து குற்றஞ்சாட்டும் வகையில் அவர் எழுதிய கருத்துகள் “விடால் வித்வன்சக்” (மாசுபாட்டை ஒழிப்பது) என்ற புத்தகத்தில் வெளியாயின. 1888ல் வெளியான இந்தப் புத்தகத்தில் சங்கராச்சாரியார் மற்றும் இதர இந்து தலைவர்களுக்கு 26 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. (E Zelliot, Dr. Babasaheb Ambedkar and the Untouchable Movement, பக்கம் 49; A Teltumbde, Dalits, Past, Present and Future, பக்கம் 48).

ஷிவ்ராம் ஜன்பா காம்ப்ளே போன்ற மகர் பிரிவினரின் மற்ற முன்னணி தலைவர்கள், தீண்டத்தகாதவர்களின் உரிமைகளுக்காகப் போராட இதழியல் துறையைப் பயன்படுத்திக் கொண்டனர். முதலாவது தலித் பத்திரிகையான “சோம்வன்ஷிய மித்ரா” -வை தயாரித்து வெளியிட்டவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது (1 ஜூலை 1908).

தலித் இயக்கத்தில் மற்றொரு மாபெரும் தலைவரும், நாக்பூர் எம்ப்ரஸ் மில் தொழிலாளர் சங்கத் தலைவருமான கிசான் பகோஜி பன்சோடே, சுதந்திரமான செய்தி நிறுவனத்தை நடத்த உதவும் வகையில் ஓர் அச்சகத்தை தொடங்கினார். அந்த அச்சகத்தின் மூலம் “மஜூர் பத்திரிகை” (1918-22) மற்றும் “சோக்கமேளா” (1936) ஆகிய இதழ்களை அவர் வெளியிட்டார். சோக்கமேளாவின் சுயசரிதையை அவர் 1941ல் தன் அச்சகம் மூலம் வெளியிட்டார். சோம்வன்ஷிய மித்ராவுக்கு முன்னதாக, மராத்தா தீனபந்து (1901), அட்யானி விலாப் (1906), மகரஞ்சா சுதாரக் (1907) ஆகிய மூன்று பத்திரிகைகளை கிசான் பகோஜி பன்சோடே தொடங்கினார்.

இருந்தபோதிலும், ஆவணக் காப்பக வசதி இல்லாததால், இன்னும் அவற்றை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் வெளியான மற்ற பத்திரிகைகளிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் பன்சோடேவின் மூன்று பத்திரிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களை ஒன்று திரட்டுவதும், சீர்திருத்தங்கள் செய்ய இந்து சமுதாயத்தினரை வற்புறுத்துவதும் அந்தப் பத்திரிகைகளின் கவனமாக இருந்தது. விமர்சனங்கள் அதிகமாக இடம் பெற்றன.

தாதாசாகிப் ஷிர்கே தொடங்கிய “கருட்” (1926), பி.என். ராஜ்போஜ் 1928ல் தொடங்கிய “தலித் பந்து”, படிட்பவன்தாஸ் தொடங்கிய படிட்பாவன் (1932), எல்.என். ஹர்தாஸ் தொடங்கிய மகர்த்தா (1933), தலித் நினாத் (1947 ) உள்ளிட்ட பத்திரிகைகள் அம்பேத்கரின் இயக்கத்துக்கு ஆதரவு அளித்தன. சாதி பற்றி காந்திய கருத்துகளைப் பரப்புவதற்காக வி.என். பார்வே “தலித் சேவக்” என்ற பத்திரிகையை தொடங்கினார்.

அம்பேத்கரின் இதழியல் பணிகள் பற்றி முதலில் தொகுத்தவர் அப்பாசாகேப் ரன்பிசே. அவர் “தலித்தஞ்சி விருட்டபட்ரே” (ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான பத்திரிகைகள்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அது 1962ல் வெளியானது. கங்காதர் பன்டவானே இந்தத் தலைப்பில் தனது பி.எச்டி ஆய்வுக்காக ஆராய்ச்சி மேற்கொண்டார். தலித் இதழியல் தலைப்பில் முதலாவது ஆய்வறிக்கையாக அதை 1987ல் வெளியிட்டார். அப்போதிருந்து அம்பேத்கரின் இதழியல் முயற்சிகள் குறித்த ஆய்வுகள் அதிகரித்து வருவதை நாம் காண முடிகிறது.

அம்பேத்கரின் இதழியல் கட்டுரைகள் கவிதை நடையில், தன் எதிரிகளுக்குப் பதிலடி தரும் வகையில் சிந்தனை வளம், சொல் வளம் மிக்க கட்டுரைகளாக இருந்தன. தீண்டத்தகாதவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த செய்திகளை மேற்கோள் காட்டி வாதம் செய்யும் வகையில் அவை அமைந்துள்ளன. சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் அரசின் கொள்கைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி அம்பேத்கர் கடுமையான கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அம்பேத்கர் எந்த அளவுக்கு சுதந்திரமான தன்னிச்சையான சிந்தனை கொண்டவர் என்பதை அவருடைய கட்டுரைகள் நமக்குக் காட்டுகின்றன. தீவிர கட்டுரையாளர், தத்துவார்த்த ரீதியில் தீவிரமாக சிந்திக்கக் கூடியவராக இருந்திருக்கிறார். தலித் சுதந்திரம் பற்றி, தலித் வாழ்க்கை குறித்த வரைபடங்களை இதழ்கள் அட்டைப்படத்தில் பிரசுரித்தன.

1927 ஜூலை 15ஆம் தேதியிட்ட “பகிஷ்க்ருட் பாரத்” இதழில், கல்வியில் அதிக வாய்ப்புகளைப் பெற்றிருந்த பிராமணர்கள் பற்றி அம்பேத்கர் எழுதியுள்ளார். உதாரணத்துக்கு மும்பை பிராந்தியத்தில் உயர் கல்வி நிலையை எடுத்துக் கொண்டால், 2லட்சம் மக்கள் தொகையில் ஆயிரம் பிராமணர்கள் உயர் கல்வி பெற்றவர்களாக இருந்தால், தீண்டத்தகாதவர்களில் ஒருவருக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்வியில் பின்தங்கிய சமூகத்தினர், உரிய பிரதிநிதித்துவம் பெற முடியாத அளவிலேயே இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் உள்ளன என்ற பெரிதும் கவலைக்குரிய தகவலாக இது இருந்தது. ( P Gaikwad (ed.), Agralekh: Bahishkrut Bharat va Mooknayak Dr Bhimrao Ramji Ambedkar).

தலித் இயக்கங்களுடன் ஒருங்கிணைந்த அம்சமாக இதழியல் இருந்துள்ளது. தலித்துகளால் முன்னெடுக்கப்பட்ட சமூக, பொருளாதார முயற்சிகளுடன் இணைந்து அது செயல்பட்டது. அம்பேத்கர் காலத்தில் இருந்ததைப் போல, இப்போதைய சூழ்நிலையில் தலித்துகளுக்கு இதழியல் துறையில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமலே உள்ளது. தலித் அல்லது சாதி தொடர்பான விஷயங்கள் குறித்து இந்தியா முழுக்க தகவல்களை அளிக்கும் பிரதானமான ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் கிடையாது. தலித்துகள் பார்வையில், உலகளாவிய விஷயங்களைத் தெரிவிக்கும் தொலைக்காட்சிகள் கிடையாது. தலித்துகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தலித்துகளால் நடத்தப்படும் ஊடகங்கள் மூலம் போராட முடியும். அம்பேத்கர் காலத்துக்குப் பிறகு, சில இதழியல் முயற்சிகள் இதற்காக செயல்பட்டன. தலித் சமூகத்தினருக்காக கான்சிராம் மேற்கொண்ட அறிவார்ந்த பணிகளை, குறிப்பிடாமல் போனால் அது தவறானதாகிவிடும்.

அம்பேத்கரின் இதழியல் கட்டுரைகள் மராத்தியில் இருப்பதால், ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளுக்கு அவற்றை மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறேன்.ஆங்கில வடிவம் தயாராகிவிட்டது என்றாலும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அம்பேத்கரின் எழுத்துகள் தேசத்தின் சொத்து. அவருடைய இதழியல் நுணுக்கங்கள் பல மொழிகளில் எல்லோரும் தாராளமாக பார்க்கும் வகையில் அளிக்கப்பட வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் தலித் இதழியல்

தற்காலச் சூழ்நிலையில், கருத்துகளை வெளிப்படுத்த நிறைய தளங்கள் உருவாகிவிட்ட நிலையில், தொழில்நுட்ப புதுமை சிந்தனைகளை எடுத்துக் கொண்டு, சுதந்திரமான முயற்சிகளில் ஈடுபட தலித்துகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏராளமான சமூக ஊடக பக்கங்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் குழுக்கள், யூ டியூப் சேனல்கள், வி-லாக், வலைப்பூக்கள் தலித்துகளால் உருவாக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கரின் இலக்கிய மற்றும் புதுமை சிந்தனைகளை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும், தொழில்நுட்பத்தின் வருகை மற்றும் கிளிக் செய்து பார்க்கும் இதழியல் ஆகியவற்றால் சில பின்னடைவுகள் ஏற்பட்டுளளன. இன்டர்நெட் சார்ந்த ஆய்வு மற்றும் இரண்டாம் நிலையில் வரும் தகவல்கள் அதிகரித்து, உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வேகமாகப் பரவுகின்றன, உண்மை தகவல்கள் வரலாற்றுப் பதிவுகள் போல ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்காலச் சூழ்நிலையில் தலித் செய்தியாளர்களுக்கு உகந்த சூழ்நிலையைக் காண்பது கடினமாக உள்ளது. ஆக்ஸ்பாம் மற்றும் நியூஸ்லாண்டரி நடத்திய ஊடக பன்முகத்தன்மை குறித்த ஆய்வு நம்மை மேலும் கீழே தள்ளுவதாக இருக்கிறது. 121 செய்திப் பிரிவு தலைமைப் பொறுப்புகளில், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் யாரும் கிடையாது. “மேல் சாதியினர்” 106 இடங்களைப் பிடித்துள்ளனர். 5 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும், 6 பேர் சிறுபான்மையினராகவும் உள்ளனர்.

தலித் விவகாரங்களை உலகின் மற்ற பகுதிகளுக்குத் தெரிவிப்பதற்கு ஆங்கிலம் அல்லது பன் மொழி செய்தித் துறையில் கவனம் செலுத்தி முதலீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இளம் தலித்துகள் இதழியலை தங்களுக்கான தொழிலாகத் தேர்வு செய்ய வேண்டும்.

சுற்றுப் பகுதியில் உள்ள தலித்துகளுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை இதழாளர்களாக உருவாக்க ஊடக நிறுவனத்தினர் முன்வர வேண்டும். தலித் அல்லாதவர்களின் பார்வையில் சிக்காத விஷயங்களை, தலித் செய்தியாளர்கள் கவனித்து எழுதும் நுட்பத்தை அவர்களிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தலித்துகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் மனிதாபிமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

எழுத்து மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் கலை, பிரத்யேகமானது. எனவே தலித் மொழி ஆளுமை, கருத்துகளை வெளிப்படுத்தும் மேற்கோள்கள், கட்டுரைகளுக்கான விதிமுறைகள், பெரிய எழுத்தாளர்களின் அளவுக்கு, பிராமணர்களின் எழுத்துகளைப் போல இல்லாமல் போகலாம். பல சமயங்களில் தலித் எழுத்தாளர்களிடம் “நல்ல தரமான எழுத்து கிடைப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.

எண்ணங்களை சரியாக வரிசைப்படுத்தாத காரணத்தால் அவர்களுடைய கட்டுரைகள் புறக்கணிக்கப்படுகின்றன. வாதம் செய்யும் திறன் மற்றும் எண்ணங்களின் புதுமை ஆகியவை, பிராமண எழுத்தாளர்களின் மொழி வளத்துக்கு ஈடாக இல்லாமல் போகலாம். அவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் அவர்கள்.

வாசகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பதை அறியாமல், எழுத்தின் உயர் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அகராதிகளில் இருந்து புதிய வார்த்தைகளை கண்டுபிடித்து எழுதுவது என்ற வலையில் பல கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். கட்டுரைகளில் வார்த்தை ஜாலங்களைக் காட்டுவது, அவரை பெரியவராகக் காட்டுவதாக நினைக்கிறார்கள்.

image

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இருந்தாலும், அது ஏழைகளை, உழைக்கும் மக்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக இருப்பதில்லை. எனவே, தலித் எழுத்தாளர்களால் அளிக்கப்படும் சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் பிராமண எடிட்டர்கள் தங்களையும் மாற்றிக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். தலித்துகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

எழுத்துப் பிழை, குறியீடுகள் பிழைகளைக் காட்ட மார்க்கரில் கோடு போடுவது என்பது தலித்துகள் அல்லது தலித் அல்லாதவர்களுக்கு புதிய விஷயம் அல்ல. பிராமண வகுப்பினரை எதிர்த்து போராடிய ஜோதிராவ் ஃபூலே மற்றும் அவருடைய சகாக்கள் இதுபோன்ற கோபங்களை சந்தித்தனர்.

ஃபூலேவின் கட்டுரைகளில் உள்ள விஷயத்தைவிட, அதில் உள்ள இலக்கணப் பிழைகளில் பிராமண எடிட்டர்கள் கவனம் செலுத்துவார்கள் (பன்டவானே பக்கம் 27). சமூக மாற்றத்துக்காக எழுதிய தலித் மற்றும் பிராமணர் அல்லாத இதர சமூகத்தினருக்கு எதிராக தங்களுடைய மொழி ஆதிக்கத்தை ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஊடக முயற்சி என்ற வகையில் தலித் இதழியல் என்பது 1908 ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. இருந்தபோதிலும், அம்பேத்கரின் எழுத்துப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் “மூக்நாயக் ஸ்தாபன தினம்” (மூக்நாயக் உருவாக்கப்பட்ட தினம்) பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தலித் தஸ்டக்கின் அசோக் தாஸ், வட இந்தியாவில் பெரிய நிகழ்ச்சியாக இதை நடத்துகிறார். அந்த நாளை ஒட்டி நான் ஹார்வர்டின் மதிப்புமிக்க இந்திய மாநாடாட்டை 2020 பிப்ரவரி 15ஆம் தேதி நான் நடத்துகிறேன். தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு செய்தியாளர்கள் – திலிப் மண்டல், துர ஜோதி, யாஷிகா தத், அசோக் தாஸ் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டு, இப்போதைய ஊடக சூழ்நிலை பற்றி கலந்தாடல் செய்கின்றனர்.

Cast Matters புத்தகத்தின் ஆசிரியரான சூரஜ் யெங்டே கட்டுரையாளர் மற்றும் இந்தியன் எக்பிரஸில் `Dalitality’ -யின் பொறுப்பாளராக உள்ளார். ஹார்வர்டு கென்னடி கல்லூரியில் ஊடகம், அரசியல் மற்றும் பொது கொள்கை குறித்த ஷோரென்ஸ்டெயின் மையத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan