பியர்ல் ஹார்பர் நினைவகம் செல்ல ஹவாய் தீவு வந்துள்ள ஜப்பான் பிரதமர்

கடந்த 1941-ஆம் ஆண்டில், பியர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்திற்கு செல்லும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே , ஹவாய் தீவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வருகையை மேற்கொண்டுள்ளார்.

இங்குள்ள நினைவிடத்தில் ஷின்சோ அபே தனது மரியாதையை தெரிவித்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

ஷின்சோ அபே ஹவாய் தீவுக்கு வந்தவுடன், அங்குள்ள பசிபிக் பகுதியின் தேசிய நினைவு கல்லறையில் மலர் வளையம் வைத்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அமெரிக்க மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் நினைவாக கட்டப்பட்ட அரிசோனா மாநில நினைவகத்தில் ஜப்பானின் பதவியில் உள்ள முதல பிரதமராக ஷின்சோ அபே இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை புரியவுள்ளார்.

ஜப்பான் தாக்குதலால் நூற்றுக்கணக்கான அமெரிக்க மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவமே, அந்நாட்டை இரண்டாம் உலகப் போரில் பங்கேற்க தூண்டியது.

ஜப்பான் நடத்திய தாக்குதலுக்கு ஷின்சோ அபே மன்னிப்பு கோருவார் என்பது எதிர்பார்க்கப்படவில்லையென்றாலும், அவர் இதற்கு வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: BBC.com