நடிகை கேரி ஃபிஷரின் தாய் டெபி ரெனால்ட்ஸ் மாரடைப்பால் காலமானார்

அமெரிக்க நடிகையான டெபி ரெனால்ட்ஸ் காலமானார். அவருடைய மகளும், திரைப்பட நடிகையுமான கேரி ஃபிஷர் உயிரிழந்ததை தொடர்ந்து அதற்கு மறுநாள் டெபி காலமானதாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.

84 வயதான டெபிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னர், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான டெபி, 1952 ஆம் ஆண்டு வெளியான சிங்கிங் இன் தி ரெயின் என்ற இசை சார்ந்த நகைச்சுவை திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபலமாக அறியப்படுகிறார். அதில், ஜீன் கெல்லிக்கு ஜோடியாக நடித்தார்.

ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தொடரில் ‘இளவரசி லேயா’ எனற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அமெரிக்க திரைப்பட நடிகை கேரி ஃபிஷர் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட மாரடைப்பை தொடர்ந்து கடந்த செவ்வாய் அன்று காலமானார்.

Source: BBC.com