Go to ...
RSS Feed

பாகிஸ்தான்: சிறையில் கால் பதிக்க நாடு திரும்பும் நவாஸ் ஷெரீஃப்


சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டில் இருந்து தண்டனையை எதிர்கொள்வதற்காகவே பாகிஸ்தான் திரும்புகிறார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு ஊழல் வழக்கு ஒன்றில் அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் பத்து ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நிலையில், வெளிநாட்டில் தற்போது இருக்கும் அவர் வெள்ளிக்கிழமை தாயகம் திரும்புகிறார்.

லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம், மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் (ஒன்றே முக்கால் கோடி இந்திய ரூபாய்) அபராதமும் விதித்துள்ளது.

அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது. மரியம் நவாசின் கணவர் கேப்டன் சஃப்தர் அவன் என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25 அன்று பாகிஸ்தானில் தேர்தல்கள் நடக்கும் நிலையில் இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

மூன்று முறை பிரதமர் பதவியிலிருந்த நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ராணுவத்துறை தனக்கு எதிராக சதி செய்வதாக நவாஸ் ஷெரீஃப் குற்றம் சாட்டினார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முறைகேடாக சொத்து சேர்த்ததை உறுதி செய்ததால், கடந்த ஆண்டு ஜூலை 28ல் நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

லண்டனில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆதரவாளர்களை புதன்கிழமையன்று சந்தித்தபோது, “அரசுக்குள் ஓர் அரசு என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அரசுக்கு மேல் ஓர் அரசு இருக்கிறது” என்று கூறியிருந்தார் நவாஸ்.

அவர் வெளியிட்ட காணொளி செய்தியில், `விமானநிலையத்தில் இருந்து நான் நேரடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்படலாம்` என்பது தனக்குத் தெரியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் வந்து இறங்கும்போது அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் வந்து கூடுவதை தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பெருமளவில் வரவேண்டும் என்று நவாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து வியாழன்னறு லாகூரில் கூடிய பி.எம்.எல்-என் கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்புவது ஏன்?

தேர்தல்கள் எதிர்வரவிருக்கும் நிலையில் “நெருக்கடியான சூழ்நிலையில்” இருக்கும் பாகிஸ்தான் மக்களுக்காக தான் நாடு திரும்புவதாக நவாஸ் ஷெரீஃப் கூறுகிறார்.

ஆனால், பாகிஸ்தான் நீதிமன்றத்தால் பத்து ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், தேசிய பொறுப்புணர்வு அமைப்பில் (நேஷனல் அக்கவுண்டபிளிட்டி பீரோ) சரணடைந்தால்தான் அவர் பிணை வாங்கமுடியும் என இஸ்லாமாபாதில் இருந்து பிபிசி செய்தியாளர் இல்யாஸ் கான் கூறுகிறார்.

எட்டிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனில் இருந்து அபுதாபி வழையாக நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com