Go to ...
RSS Feed

திட்டமிட்டப்படி டிரம்ப்- புதின் பேச்சுவார்த்தை நடைபெறும்: அமெரிக்கா


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்களன்று நடைபெறும்.

“பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்” என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக வெள்ளியன்று அமெரிக்கா, 12 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய பிறகு பேச்சுவார்த்தைக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்பதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.

“பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய கூட்டாளியாக டிரம்பை கருதுகிறோம். இருநாடுகளுக்குமான உறவு மோசமான நிலையில் உள்ளது. எனவே அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்” என க்ரெம்லின் அலோசகர் யூரி உஷகோவ் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிகாரிகள் தலையிட்டதாக அமெரிக்கா தெரிவித்த பிறகு இருநாடுகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நிலவியது.

“அந்த குற்றச்சாட்டுகள் சதித்திட்டங்களின் குவியல்” என்றும் , திங்களன்று நடைபெறவிருக்கும் “பேச்சுவார்த்தைக்கு முன்னர் சூழலை கெடுக்கும் நோக்கத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள்” என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 12 அதிகாரிகள் அமெரிக்க தேர்தலில் தலையிட்டனர் என்பதற்கான ஆதரங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“சதிகாரர்களின் திட்டம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதே” என அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் என்னென்ன?

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்களின் இமெயில்களை திறந்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு பாஸ்வேர்டு திருடும் பிஷ்ஷிங் இமெயில்களை ரஷிய உளவுத்துறையினர் அனுப்பியதாகவும், வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் குற்றம்சாட்டியுள்ளார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரகசியமாக கணினிகளை கண்காணித்ததுடன், தீங்கிழைக்கும் குறியீடு கொண்ட நூற்றுக்கணக்கான கோப்புகளை கணினிக்குள் செலுத்தி, மின்னஞ்சல்கள் மற்றும் பிற ஆவணங்களை திருடினார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன சொல்கிறார் டிரம்ப்?

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவுடனான சந்திப்பில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து `நிச்சயம்` புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக டிரம்ப் தெரிவித்தார்.

மூத்த ஜனநாயகக் கட்சி பிரமுகர்கள் சிலர் பேச்சுவார்த்தையை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.

எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் தலையிடுவதில்லை என்பதை நிரூபிக்க ரஷ்யா நம்பகமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை பேச்சுவார்த்தை நடைபெறக்கூடாது என ஜனநாயகக்கட்சியின் செனட் தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.

“புதினை பொறுப்பாளியாக கருத டிரம்ப் தயாராகும் வரை பேச்சுவார்த்தை நடைபெறக் கூடாது” என குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் ஜான் மெக்கைன் தெரிவித்துள்ளார்.

2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறப்பு விசாரணை குழு தலைவர் ராபர்ட் முல்லர் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையில் ஏற்கனவே 20 நபர்களின் மீதும், மூன்று நிறுவனங்கள், டிரம்பின் முன்னாள் அலோசகர்கள் நான்கு பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com