Press "Enter" to skip to content

எகிப்தில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு

எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சில துணிகளால் மூடப்பட்டிருந்தன, மற்றவை கல் சவப்பெட்டிகளிலோ அல்லது மர பெட்டிகளிலோ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

பதப்படுத்தப்பட்ட இந்த உடல்கள் யாருடையது என்று தெரியவில்லை என எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதேவேளையில் இவர்கள் அக்காலகட்டத்தில் அரசில் முக்கிய பதவி வகித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியராக உணர்வது பற்றி பிபிசி-யிடம் கூறிய கருத்துக்காக கௌசல்யா பணியிடை நீக்கம்

ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், “அம்பேத்கர் இந்தியாவை யூனியனாகத்தான் கருதினார். அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. தேச மொழி என்று ஒன்று இந்தியாவில் இல்லை. பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை ஒரு அடிமைப்படுத்தும் மாநிலமாகத்தான் இந்தியா நடத்திவருகிறது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் முன்மொழிந்து செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்,” என்று கூறிய கௌசல்யா, மக்கள் இந்த திட்டங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு இந்த திட்டங்களை கைவிடவில்லை என்றும், விவசாயிகள் டெல்லிக்கே சென்று போராடியிருந்தாலும் அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்கவில்லை என்றும் கூறி அதனால், தாம் இந்தியாவை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறிய கருத்துக்கள் ‘இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி, தேதி குறிப்பிடாமல் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ஹரிஷ் வர்மா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: இந்தியராக உணர்வது பற்றி பிபிசி-யிடம் கூறிய கருத்துக்காக கௌசல்யா பணியிடை நீக்கம்

தனது சொந்தங்களைத் தேடும் யானை ‘சின்னத்தம்பி’

கோவையில் கிருஷ்ணபுரம் பகுதியில் இருக்கும் சின்னத்தம்பி என்ற யானை, அதனுடைய யானை கூட்டத்தோடு சென்று சேர பழைய இடத்திற்கு செல்ல முயற்சித்து ஊர்களுக்குள் சுற்றி வருகிறது.

கோவை ஆனைகட்டி, மாங்கரை, சின்ன தடாகம், பெரிய தடாகம், பன்னிமடை, ஆகிய பகுதிகளில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியதாக விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்து போராட்டங்கள் நடத்திவந்தனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் விநாயகன் என்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் விட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் குழு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் திருநாவுக்கரசருக்கு பதிலாக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்

சனிக்கிழமையன்று தமிழ்நாடு காங்கிரஸ் குழுயின் தலைவராக கே.எஸ். அழகிரியை நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் அவருடன் 4 செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவருடன், நாங்குநேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், எம்.கே. விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தலித் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவை விடுவித்தது பூனே நீதிமன்றம்

தலித் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறிய பூனே நீதிமன்றம் அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது.

நக்சல்களுடன் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்த் எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இன்று என்னை நீதிமன்றம் விடுவித்திருப்பதில் மகிழ்ச்சி, ஆனால் கைது செய்யப்படும்போது எனக்கு ஏற்பட்ட அவமானத்தை விவரிக்க முடியாது என்று ஆனந்த் டெல்டும்டே தெரிவித்தார்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: தலித் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவை விடுவித்தது பூனே நீதிமன்றம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.