Press "Enter" to skip to content

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட மனைவியிடம் இசை வழியாக பேசும் கணவர்

ஒவ்வொரு நாள் மதியமும், தன் கிட்டாரை எடுத்து தன் மனைவி சுவேலிக்காக இசைக்கிறார் லுசியோ யானெல்.

ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் இடையே நம்முடன் பேசுகிறார் தெற்கு பிரேசிலில் வசிக்கும் லுசியோ.

அல்சைமர் என்ற மறதி நோயின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் சுவேலி.

திருமணமாகி 25 ஆண்டுகள் ஆக, தற்போது தன் மனைவியுடன் இந்த இசை மூலமாக மட்டுமே பேசுகிறார். தன் மனைவி, மிக தொலைவில் இருக்கும் ஏதோ ஒரு உலகத்தில் வாழ்வதாக கூறுகிறார் லுசியோ.

2015ஆம் ஆண்டிலிருந்து சுவேலி யாருடனும் பேசுவதில்லை. தானாகவே நடக்கவோ அல்லது உணவு அருந்தவோ அவரால் இயலாது.

“அவருக்கு எதை செய்யவும் உதவி வேண்டும். நாள் முழுக்க படுக்கையிலேயே தான் இருப்பார்” என்று பிபிசி பிரேசில் சேவையிடம் அவர் தெரிவித்தார்.

தன் மனைவி சுவேலியின் நிலை, மோசமடைந்து விட்டதாக ஜனவரி 23ம் தேதி பேஸ்புக்கில் தங்களது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் லுசியோ.

திடீர் புகழ்

“இந்த பாழாய்ப்போன அல்சைமர் நோய், கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் இருந்து என் மனைவியை பிரித்து வைத்திருக்கிறது” என்று அதில் அவர் எழுதியிருக்கிறார்.

“நான் உன்னோடு உன் அருகில் இருக்கிறேன் என்பதை நீ உணரவே நான் தினமும் இசைக்கிறேன்.”

இந்தப் புகைப்படம், 54,000 ரியாக்ஷன்ஸ் மற்றும் 63,000 பகிர்வுகள் பெற்று வைரலானது.

இது லுவியோவிற்கு பெரும் வியப்பளித்தது.

“ஏதோ நினைத்து இந்த புகைப்படத்தை பதிவேற்றினேன். இவ்வளவு பேர் இதை பார்ப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், நான் மகிழ்ச்சியாக இருப்பது போன்று நடித்து சோர்வாகிவிட்டேன். அல்சைமர் நோயால் என் மனைவி அவதிப்படுவதை பார்க்கிறேன். என்னால் அதனை தவிர்க்க எதையும் செய்ய இயலவில்லை” என்று லுசியோ கூறினார்.

உலகை அச்சுறுத்தும் அல்சைமர்

மனச்சோர்வினால் ஏற்படும் டிமென்ஷியாவின் ஒரு வகையே அல்சைமர் நோய். உலகின் டிமென்ஷியா பாதிக்கப்படும் நபர்களில் 60சதவீதம் பேர் அல்சைமரால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அறிக்கை கூறுகிறது.

தற்போது இதற்காக இருக்கும் சிகிச்சைகள், இதன் அறிகுறிகளை போக்க உதவுகிறதே தவிர, இந்த நோயை தடுக்க முடியவில்லை.

சுவேலிக்கு 2008ஆம் ஆண்டு அல்சைமர் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவருக்கு வயது 52. பொதுவாக 65 வயதை தாண்டியவர்களுக்கே இந்த நோய் வரும்.

“அல்சைமர் பாதிப்பால் அனைவரின் பெயர்களையும் மறந்து போனார். எப்படி குளிப்பது, எப்படி கழிவறைக்கு செல்வது என்பதைக்கூட அவர் மறந்துவிட்டார்” என்கிறார் பிபிசி பிரேசில் சேவையிடம் பேசிய லுசியோ-சுவேலி தம்பதியின் இளைய மகனான பெட்ரோ.

லுசியோ கிட்டார் இசைக் கலைஞர்.

அர்ஜென்டினாவில் பிறந்த அவர், லத்தீன் அமெரிக்காவின் சில புகழ்பெற்ற கலைஞர்களோடு கிட்டார் வாசித்திருக்கிறார்.

தன் மனைவியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இன்னும் கிட்டார் வாசித்தாலும், அதனை இப்போது குறைத்துக் கொண்டார்.

கண்ணீரை போக்கும் கிட்டார்

சுவேலியின் நிலை மோசமடைவதற்கு முன்பாகவே, தன்னையோ அல்லது தன் தந்தையையோ அவரால் அடையாளம் காண முடியவில்லை என்கிறார் பெட்ரோ.

ஆனால், சில சமயம் சுவேலிக்கு அடையாளம் தெரிவதாக நம்புகிறார் லுசியோ.

“நான் முத்தம் கேட்கும் போது, அவர் கொடுப்பார். எங்கள் மகனின் கண்ணத்திலும் அவர் முத்தம் அளிப்பார்.”

மருந்து மாத்திரைகளால் செய்ய முடியாததை, இசை செய்வதாக லுசியோ உணர்கிறார்.

இந்த நோய் சுவேலியை அடிக்கடி அழ வைக்கிறது. ஆனால் லுசியோவின் கிட்டார் இசை கேட்கும்போது அவர் அமைதியாக இருக்கிறார்.

லுசியோவின் இசை சுவேலிக்கு மிகவும் அவசியமானது என்கிறார் மனநல மருத்துவர் ரிகெய்ன் கரிடோ.

“மிகவும் உணர்ச்சிகரமான நினைவுகள்தான் கடைசியாக நீங்கும்.”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.